படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்திக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி.
இராணுவத்தால் யாழ்ப்பாணம் – செம்மணியில் வைத்து கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சுண்டிக்குளி மகளிர் கல்லூரி உயர்தர மாணவி கிருஷாந்தி குமாரசுவாமிக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பிள்ளைகள், தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அஞ்சலியைச் செலுத்தினார்.
யாழ்ப்பாணம் செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று வடக்கு, கிழக்கில் கடைப்பிடிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7 ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி செம்மணிப் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.