விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு விசாகா கல்லூரி மாணவிகள் பழைய பாராளுமன்றத்திற்கு வருகை
ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டத்துடன் இணைந்ததாக, கொழும்பு விசாகா கல்லூரியின் விசேட பாராளுமன்ற அமர்வு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற பீடத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
கொழும்பு விசாகா கல்லூரி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “Clean Sri Lanka” திட்ட எண்ணக்கருவின் மதிப்பு மற்றும் அதன் நடைமுறை முக்கியத்துவம் குறித்த தெளிவு பெறவும் வாய்ப்பு கிடைத்தது.
மாணவர் பாராளுமன்றம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட “விஷன்” சஞ்சிகையின் பிரதியை, பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் நிறைவேற்றுப் பொறுப்பு தொடர்பான உதவிப் பணிப்பாளர் நதீக தங்கொல்ல பிரதமரிடம் வழங்கினார்.
இதன் போது விசாகா கல்லூரி அதிபர் மனோமி செனவிரத்னவினால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு விசேட நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தலைமுறையொன்றை உருவாக்க புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.
உலகில் அறிவைப் பெறுவதற்கு மாணவர்களை தயார்படுத்துவது மற்றும் தன்னம்பிக்கை கொண்ட மாணவர் தலைமுறையை உருவாக்குவது என்பன அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் வேலைவாய்ப்புச் சந்தைக்கு மட்டுமல்லாமல், சமூகத்தை வழிநடத்தக் கூடிய பொருளாதாரத்திற்கும் பங்களிக்க முடியுமான திறமையான இளைஞர்களை உருவாக்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கிடையே வளங்களைப் பகிர்ந்து செல்வதில் உள்ள ஏற்றத்தாழ்வை நீக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதோடு இதற்கு பிரஜைகளின் பொறுப்பின் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன உரையாற்றுகையில்,
‘தலைமைத்துவம் ஆணவத்திலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். ஆணவமில்லாத தலைவர்கள் நாட்டையும் மக்களையும் நல்ல திசையில் வழிநடத்துவார்கள். அதற்கு, நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இலங்கை வரலாற்றிலிருந்து அல்லது உலக வரலாற்றிலிருந்து திறமையான தலைவர்களைப் பற்றிய தெளிவைப் பெற முடியும். சண்டசோக எப்படி தர்மசோக ஆனார் என்பதையும் ஹிட்லரின் சர்வாதிகாரம் எப்படி உலகை அழிவுக்கு இட்டுச் சென்றது என்பதையும் மாணவர்கள் என்றவகையில் படிக்க வேண்டும். குறைந்தபட்ச நுகர்வு கொண்ட, நாட்டைப் பற்றி சிந்திக்கும் தலைவர்களின் தோற்றம் ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை எளிதாக்கும். எனவே, நாட்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய தலைவர்களை உருவாக்க நாம் பாடுபட வேண்டும். பொதுநலத்தை இறுதி இலக்காகக் கொண்டு, நாட்டு மக்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார,
இன்று இந்த பாராளுமன்ற சபாபீடத்தில் இருப்பவர்கள் மாத்திரம் எதிர்காலத் தலைவர்கள் அல்ல. இங்குள்ள மாணவிகள் அனைவரும் தலைவர்கள். ஏனென்றால் தலைவர்களுக்கு இடையே வயது வித்தியாசம் இல்லை. ஒரு குழுவிற்காக முன்னிற்கும் நபர் தலைவராக மாறுகிறார். குழுவில் அதிகாரம் செலுத்துபவர்கள் தலைவர்களாகவும் மாறுகிறார்கள். நம் நாட்டின் வரலாற்றில், குறைந்தபட்சம் தங்கள் வார்த்தைகளால் நாட்டிற்கும் மக்களுக்கும் பங்களித்த தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். எனவே, பகுத்தறிவைப் பயன்படுத்தி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதற்குத் தலைவருக்கும் குடிமகனுக்கும் பொறுப்பு உண்டு. பகுத்தறிவு மூலம் ஒரு அழகிய பொன்னிலத்தை உருவாக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. ஒவ்வொரு மாணவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்றார்.
பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தலைவர் ஹிமாலி வீரசேகர, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கே.எம்.என். குமாரசிங்க, ஜனாதிபதி சட்டப் பணிப்பாளர் நாயகம் ஜே.எம். விஜேபண்டார, விசாகா கல்லூரி அதிபர் மனோமி செனவிரத்ன உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.