கோலாகலமாக கொண்டாடப்பட்ட தமிழர் மரபு திங்கள் விழா

தமிழர்கள் வாழ்வில் பெரும் பண்பாட்டு நிகழ்வான தமிழர் மரபு திங்கள் விழா லண்டனில் கடந்த ஞாயிறு (19/01/2025) அன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இயற்கையை தெய்வமாக வழிபடும் தமிழர்கள் அந்த இயற்கைக்கு நன்றி கூறி விழா எடுப்பதுடன் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பையும் கொண்டாடும் இந்த தை மாதத்தில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைத்திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் பிரித்தானியாவில் பல பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் தம் அடையாளங்களின் வழி பயணிக்கவும் தம் அடையாளங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் தமிழ் மரபு திங்கள் நிகழ்வுகளை பல்வேறு பகுதிகளில் கொண்டாடி வருகின்றனர். அவற்றில் சிறப்பாக தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் நியூ மோல்டன் பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வானது கிங்ஸ்டன் நகரசபையின் (Kingston Borough Council) ஆதரவுடன் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD), தமிழ் தகவல் நடுவம் (TIC), ITC கிங்ஸ்டன் தமிழ் பாடசாலை மற்றும் and சறே தமிழ் பாடசாலை உள்ளடங்கிய கிங்ஸ்டன் தமிழ் மரபுக்குழுவினரால் (Kingston Tamil Heritage Group) சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழர்களின் வீர இசை பறை முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்க மற்றும் மயிலாட்டம் குதிரையாட்டம் புலியாட்டம் கரகாட்டம் என தமிழர்களின் கண்கவர் கலைகளுடன் நிகழ்வின் விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு தமிழர்களின் பல்வேறு கலை பாரம்பரிய நிகழ்வுகளுடன் மரபுத் திங்கள் நிகழ்வுகள் கோலாகலமாக இடம்பெற்றது.

நமது ஈழநாடு மற்றும் மெய்வெளி ஆகிய ஊடகங்களின் ஊடக பங்களிப்போடு இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.