எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்ற தைப் பொங்கல் கொண்டாட்டம்
தமிழ் மக்களால் மிகுந்த பக்தியுடனும், உற்சவத்துடனும் கொண்டாடும் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வொன்று கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் வஜிரா பிள்ளையார் ஆலயத்தில் வெகுவிமர்சியாக இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியையும், ஐக்கிய மக்கள் கூட்டணியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். தைப்பொங்கல் என்கிற அறுவடைத் திருவிழா உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்படும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். மரபு ரீதியாக அறுவடைக் காலத்தில் கொண்டாடப்படும் இந்த விழா நன்றியுணர்வு மற்றும் செழிப்புடன் தொடர்புடையது.
தைப்பொங்கலின் உண்மையான பொருளை புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார். விவசாய வாழ்க்கை முறையில், ஒருவரின் பொருளாதாரத்தையும் வாழ்க்கையையும் வலுப்படுத்தி, பயிர்களை செழிப்பாக்க உதவிய சூரியன், மழை, இயற்கை மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம்இ நன்றி செலுத்துதல் என்ற பெரிய பாடம் கற்பிக்கப்படுகிறது, இதனை எதிர்கால சமுதாயத்தில் முறையாக உள்வாங்குவது நமது பொறுப்பாகும்.
ஒரு நாட்டின் மக்களுக்கான பொறுப்பை ஏற்றுள்ள ஆளும் கட்சிக்கு, பொதுமக்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பது, அந்த அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு செலுத்தப்படும் நன்றி மற்றும் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும் என்பதை தைப்பொங்கல் விழாவின் உட்பொருளை சரியாக புரிந்துகொள்வதன் மூலம் உணரலாம். ஆரம்பத்தில் விவசாய சமூகத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த விழா, இன்று இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தமிழ் மக்களின் தேசிய விழாவாக மாறியுள்ளது.
பல்மத, பல்லின, பல்மொழி சமூகம் கொண்ட நமது தாய்நாட்டில்இ பன்முகத்தன்மையில் ஒற்றுமையை ஊக்குவிக்கும் மற்றொரு தேசிய விழாவாக தைப்பொங்கல் விழாவை ஒன்றிணைந்து கொண்டாடுவது நமது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க உதவும்.ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட தைப்பொங்கல் விழாவை கொண்டாடும் இலங்கை வாழ் சகோதர சகோதரிகளுக்கு பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.