ஆப்கானிஸ்தானில் ரஷிய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; 2 தூதர்கள் உள்பட 20 பேர் பலி.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகரில் இருந்து தென்மேற்கில் ரஷிய தூதரகம் அமைந்த பகுதியருகே தருலாமன் சாலையில் இன்று காலை 11 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது. எனினும், குண்டுவெடிப்புக்கான காரணம் பற்றிய தகவல்கள் எதனையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.

தூதரகத்திற்கு வெளியே மக்கள் விசாக்களை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்து உள்ளனர். அவர்களில் பலர் பலியாகி இருக்க கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், குண்டுவெடிப்பில் 2 ரஷிய தூதர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை ரஷிய அரசுடன் தொடர்புடைய ஆர்.டி. என்ற ஊடக தகவல் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி மிர்ரர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரஷிய தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் (தலீபான்கள்), தாக்குதல் நடத்துவதற்கு வந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதியை கண்டறிந்த பாதுகாவலர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர் வெடிகுண்டை வெடிக்க செய்திருக்க கூடும் என நம்பப்படுகிறது என செய்தி தெரிவிக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்நாட்டில் வடமேற்கு பகுதியில் வெள்ளி கிழமை இறைவணக்க கூட்டத்தின்போது, மசூதியில் நடந்த தாக்குதலில், 20 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில், இறைவணக்க கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திய, கிளர்ச்சியாளர்களின் தலைகளையும், திருடர்களின் கரங்களையும் வெட்டும்படி பரிந்துரைத்த மதகுரு மவுலவி முஜிப் ரகுமான் அன்சாரி என்பவரும் ஒருவர் ஆவார். தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் மற்றொரு தாக்குதலில் அந்நாட்டில் 20 பேர் உயிரிழந்து இருப்பது உலக நாடுகளிடையே அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.