முல்லைத்தீவு கேப்பாபுலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் மகஜர் கையளிப்பு
முல்லைத்தீவு கேப்பாபுலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி நேற்று திங்கட்கிழமை (04) மாலை புதுக்குடியிருப்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் ஹரினி அமரசூரியவை கேப்பாப்புலவு மக்கள் சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளினை மீட்டுத் தருமாறு கோரிய தமது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றினை வடமாகாண ஆளுநர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் கடந்தமாதம் ஒப்படைத்திருந்தனர்.
அதனையடுத்து நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின், ‘நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம் புதுக்குடியிருப்பு தனியார் பஸ் நிலைய வளாகத்தினுள் நடைபெற்ற நிலையில் அக்கூட்டத்தில் சிறப்பு அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொண்ட நிலையில் கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை மக்கள் கையளித்திருந்தனர்.