கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி தரையிறக்கப்படும் இந்திய விமானங்கள்:  தேசிய பாதுகாப்பு சபை தீவிர அவதானம்

இலங்கையின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் தொடர்ச்சியாக இலங்கையின் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து தேசிய பாதுகாப்பு சபையில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் முப்படை பிரதானிகள், அரச பாதுகாப்புத் துறையின் உயர்மட்ட அதிகாரிகள், துறைசார் அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, அறுகம்பே விவகாரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன்,  குறித்த புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்றன் பின்னர் நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட விதம் மற்றும் எதிர்கால பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோன்று தொடர்ந்து இலங்கைக்கு வரும் சில அச்சுறுத்தலான தகவல்கள் குறித்து எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பை பொது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பின்றி பலப்படுத்துவதற்கான பொறிமுறைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வெடி குண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு தொடர்ச்சியாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் இந்திய விமானங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்வாறு விடுக்கப்படும் வெடி குண்டு மிரட்டல்கள் இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளது.