ஒரு வருட மழை 8 மணிநேரத்தில் பொழிந்தது! மரங்களில் ஏறித் தப்பிய பலர்!
எழுபதுக்கும் மேற்பட்டோர் அடித்துச்செல்லப்பட்டனர்!!ஸ்பெயின் தென் கிழக்குப் பிராந்தியம் வெள்ளத்தில்!
Kumarathasan Karthigesu-பாரிஸ்
ஸ்பெயின் நாட்டின் தென் கிழக்குப் பிராந்தியத்தில் கொட்டிய பெருமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணியாளர்களுக்கு உதவும் பணியில் ஆயிரம் படை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. குறைந்தது 72 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதை இதுவரையான தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் பலர் காணாமற்போயுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெயின் அரசு நாட்டில் மூன்று தினங்கள் துக்கம் அறிவித்துள்ளது.
வலென்சியாவுக்கு (Valencia) அருகே ஷீவா (Chiva) என்ற நகரில் ஒருவருட காலம் பெறுகின்ற ஒட்டுமொத்த மழையின் அளவு சுமார் எட்டு மணித்தியாலங்களில் பதிவாகியுள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கிராமங்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மீட்புப் பணியாளர்கள் சென்றடைய முடியாத இடங்களில் ஹெலிகளும் பிளாஸ்டிக் படகுகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சமூகவலை ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோக்கள் பாலங்களையும் பெருந் தெருக்களையும் வெள்ளம் அடித்துச் சென்றிருப்பதைக் காட்டுகின்றன. கார்கள் வாரிச் செல்லப்பட்டு வீதிகளில் குவிக்கப்பட்டுக் காட்சி தருகின்றன. கிடுகிடுவென வெள்ளம் உயர்ந்து வருவதையும் அதிலிருந்து தப்புவதற்காகப் பலரும் மரங்களில் ஏறுகின்ற காட்சிகளும் பகிரப்பட்டுள்ளன.
கழுத்தளவு வெள்ளம் வருவதற்கு அரை மணிநேரத்துக்கும் முன்பாகவே உள்ளூர் வாசிகளுக்கு மழை வெள்ளம் பற்றிய எச்சரிக்கைச் செய்திகள் கிடைத்துள்ளன. இதனால் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அவகாசம் பலருக்கும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சமீப காலமாக மிகக் குறுகிய நேரத்துக்குள் கொட்டித் தீர்த்து அழிவுகளை ஏற்படுத்தும் கன மழைப் பொழிவுகள் ஐரோப்பிய நாடுகளிலும் உலகின் வேறு பகுதிகளிலும் அடிக்கடி இடம்பெறுகின்றன. புவி வெப்பமடைதல் ஏற்பட்டுவரும் காலநிலை மாறுதல்களில் இதுவும் ஒன்று என்று சொல்லப்படுகிறது.
ஸ்பெயினில் எட்டு மணி நேரத்தில் 499 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. நாடு இதுவரை சந்தித்திராத பெரும் வெள்ள அனர்த்தம் இது என்று தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்த பலரும் கூறியிருக்கின்றனர்.
2021 ஆம் ஆண்டு ஜேர்மனி மற்றும் போர்த்துக்கல் போன்ற நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய புயல் மழை வெள்ளத்தை ஒத்த ஒரு பேரனர்த்தம் இது என்று குறிப்பிடப்படுகிறது.