குளிர்கால நேரமாற்றம், எப்படி வந்தது? இனியும் தொடர வேண்டுமா?
84 வீத பிரெஞ்சு மக்கள் அதை ஆதரிக்கவில்லை
Kumarathasan Karthigesu-பாரிஸ்
குளிர்கால நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது. பிரான்ஸில் மக்கள் இன்றிரவு ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்கமுடியும். அதிகாலை மூன்று மணியாகும் போது ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டு இரண்டு மணியாகக் கணிக்கப்படும்.
நேர மாற்றம் எப்போது எதற்காகப் பின்பற்றப்பட்டது?
1983-84 ஆம் ஆண்டுப் பகுதியில் உலகைப் பாதித்த”எண்ணெய் அதிர்ச்சி” (oil shock) என்கின்ற எரிபொருள் விலை உயர்வை அடுத்தே எரிசக்திப் பாவனையைச் சிக்கனமாக்குகின்ற நோக்கோடு 1986 முதல் இந்த நேர மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
எரிபொருள் பாவனையைக் குறைக்க நாளாந்தம் கருமங்களை ஆற்றும் நேரத்தைப் பகல் வெளிச்சத்துடன் ஒத்திசைவாக்குவதையும் மாலையில் வீடுகளை ஒளியூட்டும் நேரத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டே இந்த மாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
1998 இல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் இணங்கிக்கொள்ளப்பட்ட இந்த நடைமுறையின்படி பிரான்ஸின் பெருநிலப்பரப்பில் மாத்திரமே குளிர்கால நேர மாற்றம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடல் கடந்த நிர்வாகப் பிராந்தியங்களில் Saint-Pierre-et-Miquelon தீவு தவிர்ந்த ஏனைய இடங்களில் நேரமாற்றம் செய்யப்படுவதில்லை.
இனிமேலும் தொடர வேண்டுமா?
பிரான்ஸில் மக்களது எரிசக்திப் பாவனை முறைகள் பெருமளவில் மாறிவிட்டன. மின் தேவைக்குப் பற்றரிகளது பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேசமயம் குறைந்தளவு சக்தியில் ஒளியூட்டும் வசதிகளும் வந்துவிட்டன. எனவே பாரம்பரிய முறைகளிலான எரிபொருள் பாவனைக் காலத்தில் ஆரம்பித்த இந்த நேரமாற்ற முறையை இனிமேலும் தொடர வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.
குளிர்கால நேரமாற்றம் தேவையா என்பது தொடர்பில் ஐரோப்பியக் குடிமக்களது கருத்தறியும் ஆய்வு ஒன்றை ஐரோப்பிய ஆணையகம் 2018 இல் நடத்தியிருந்தது. 84 சதவீதமான ஐரோப்பியர்கள் அதனை இல்லாதொழிப்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். அவர்களில் 56 வீதமானோர் கோடைகால நேரத்தையே நிரந்தரமாகத் தொடர வேண்டும் என்று விரும்பினர். குளிர்கால நேரத்தைத் நிரந்தரமாக்குவதற்க் 32 வீதமானோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதேபோன்ற ஒரு கருத்தறியும் கணிப்பை 2019 இல் பிரான்ஸின் நாடாளுமன்றமும் நடத்தியிருந்தது. அதில் பங்குபற்றிய இரண்டு மில்லியன் குடிமக்களில் 83.71 சத வீதமானவர்கள் இந்தப் பருவகால நேர மாற்ற முறையை நீக்குவதற்கு ஆதரவு வெளியிட்டிருந்தனர்.
பெரும்பான்மை மக்களது ஆதரவு கிடைத்ததை அடுத்து இந்த நேரமாற்ற முறையை 2021 முதல் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரேரணை ஒன்றை ஐரோப்பிய ஆணையகம் தயாரித்திருந்தது. ஆனால் கோவிட் பெருந் தொற்று மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பிரெக்ஸிட் பேச்சுக்கள் என்பன அந்தப் பிரேரணையைப் பரிசீலித்துச் சட்டமாக்குகின்ற நடைமுறைகளைத் தாமதப்படுத்தியது. கடைசியில் அது கிடப்பில் போடப்பட்டுவிட்டது. நேரமாற்றம் தொடர்கிறது.