இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசாங்கத்தின் தவறு: வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

37 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசாங்கத்தின் தவறு என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் கூறியுள்ளார். அவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘த இந்தியா வே’ புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினை தொடர்பான சில சிறப்புக் குறிப்புகளை இந்தப் புத்தகம் உள்ளடக்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரைஇ ஆரம்பம் முதலே இலங்கை விடயங்களை சவாலாக எதிர்கொண்டது. இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை குறித்து அக்கறை கொண்டுஇ உத்தரவாதமான தீர்வைக் கொண்டுவர இந்தியாவினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை ஆரம்பத்திலேயே தவறாகிவிட்டன.

ஆனால் அவை சாதாரணமான நடவடிக்கைகள் அல்ல என இந்திய வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் அமைதி காக்கும் பணிக்காக இந்தியா கடுமையாக உழைத்த போதிலும், அது குறைவான கவனத்தையே பெற்றது என வெளிவிவகார அமைச்சர் தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.37 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா தலையிட்டமை குறித்து, வெளிவிவகாரத்துறையில் கீர்த்தி பெற்றவராக திகழும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.