இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி
இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
அரசியல் காட்சிகளின் தலைவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இது குறித்துப் பேசிய அவர் ‘ பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டிய மொழிகள் தான். இந்தி எப்போதும் திணிக்கப்படவில்லை. முன்னதாக நான் தமிழகத்தில் மக்கள் இந்தி கற்றுக்கொள்ளமாட்டார்கள் இந்தி எதிர்ப்பு இங்கு இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
அதன்பிறகு, பல பகுதிகளுக்குச் சென்ற பிறகு தான் தமிழ் மக்களும் இந்தி கற்பது எனக்குத் தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளேன். இந்தி மொழியை மக்கள் கற்பதை நான் பார்த்தேன். தமிழக மக்களிடையே இந்தி மொழியைக் கற்க வேண்டும் என்ற எண்ணம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரிக்கக் கடந்த 50 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்துள்ளது எனவும், இந்தியாவைப் பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது,இந்தியாவின் பலமான அங்கமாகத் தமிழ்நாடு எப்போதும் இருக்கும் எனவும் ஆளுநர் ரவி கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ‘ தமிழகத்தில் மட்டும் தான் 3ஆவது மொழியை அனுமதிக்க மறுக்கின்றனர். பிற மாநிலங்களில் அனுமதிக்கின்றனர். தமிழுக்காக மத்திய அரசும் பிரதமரும் மட்டுமே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் எனவும், தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் தமிழை இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்ல என்ன செய்தனர்? என ஆளுநர் ரவி கேள்வியையும் எழுப்பினார்.