கொழும்பில் அநுர அணிக்கு 10 ஆசனங்கள் கிடைத்தால் ஏனைய கட்சிகளின் நிலை?

ஆர்.சனத்
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், அதே அளவான வாக்குகள் பொதுத்தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கபெறும் பட்சத்தில் கொழும்பு மாவட்டத்தில் அக்கட்சிக்கு 09 ஆசனங்கள் கிடைக்கப்பெறும். மாவட்டத்தைக் கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் மேலதிகமாக ஒரு ஆசனம் கிடைக்கப்பெறும். மொத்தம் 10 ஆசனங்கள்.
(ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கொழும்பு மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 629, 963) பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு 4 ஆசனங்கள் கிடைக்கப்பெறக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. சிலவேளை வாக்கு வங்கி அதிகரித்து ஐந்து ஆசனங்கள் கிடைக்கப்பெற்றால்கூட, கடந்த முறையைவிட இம்முறை ஒரு ஆசனத்தை இழக்கநேரிடும்.
ஏனெனில் கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு 6 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.
ஜனாதிபதி தேர்தலில் சிலிண்டர் கூட்டணி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அத்தரப்புக்கும் 4 ஆசனங்களை பெறக்கூடிய அளவுக்கு வாக்கு வங்கி உள்ளது.
கொழும்பு மாவட்டதிலிருந்து 2020 பொதுத்தேர்தலில் 19 எம்.பிக்கள் நாடாளுமன்றம் தெரிவாகி இருந்தனர். இம்முறை ஆசன எண்ணிக்கை ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, 18 பேர்தான் தெரிவாகக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. கொழும்பு மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமே கிடைக்கப்பெற்றது. இம்முறை 10 கிடைக்கும்பட்சத்தில், கொழும்பு மாவட்டத்திலிருந்து ஏனைய கட்சிகள் சார்பில் 9 பேர் தெரிவாக முடியாத நிலை ஏற்படும்.
கடந்த பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மொட்டு கட்சிக்கு 674,603 வாக்குகள் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் 12 ஆசனங்களை அக்கட்சி வென்றது.
ஐக்கிய மக்கள் கூட்டணியிலிருந்து கடந்தமுறை அறுவர் சபைக்கு தெரிவாகினர். இம்முறையும் கொழும்பு மாவட்டத்தில் கட்சி தலைவர் சஜித் உட்பட வேட்பாளர் பட்டியல் பலமாக உள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். நான்கு ஆசனங்கள் கிடைத்தால், இவர்களில் இருந்து நால்வரே விருப்பு வாக்கு அடிப்படையில் தெரிவாவார்கள்.
தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, சரத்வீரசேகர போன்ற வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். சிலவேளை நட்சத்திரக்கூட்டணி மற்றும் மொட்டு அணிக்கு தலா ஒரு ஆசனம் கிடைக்கப்பெறும்பட்சத்தில் அதுவும் தேசிய மக்கள் சக்தி அல்லது ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்குரிய ஆசனத்திலேயே தாக்கம் செலுத்தும்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் இரு தமிழ் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளனர். ஈபிடிபியும் கொழும்பில் போட்டியிடுகின்றது. தமிழரசுக் கட்சி கொழும்பில் வேட்பாளரை நிறுத்தவில்லை.சங்கு அணியும் பின்வாங்கியுள்ளது. சிலிண்டர் அணியில் இதொகாவும் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தக்கூடும்.
எனவே, கொழும்பில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு கடுமையாக போராடவேண்டிய நிலை ஏற்படும். மக்கள் போராட்ட முன்னணியும் பலமான அணியை களமிறங்கியுள்ளது. சுயேச்சைக்குழுக்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. முன்னாள், இந்நாள் பிரதமர்களும் போட்டியிடும் மாவட்டமாகவும் கொழும்பு உள்ளது. எனவே, கொழும்பில் பலமுனை போட்டிக்கு பஞ்சமிருக்காது.