தமிழரசுக் கட்சியை விட்டு என்னை வெளியேற்றுவதற்கும் பலர் முயற்சிக்கின்றனர் : சிவஞானம் சிறீதரன் தெரிவிப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியை விட்டு நான் வெளியேறி விடுவேன் எனப் பலரும்தெரிவிக்கின்றனர். ஆனால் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு நான் வெளியேறமாட்டேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
என்னை வெளியேற்றுவதற்கும் பலர் முயற்சிக்கின்றனர். எனினும் இறுதிவரை போராடுவேனென்றும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் , தமிழுக்கு இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடிநாதமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கட்சியே இலங்கைத் தமிழரசு கட்சி.
அதனுடைய கொள்கை பிறழாது, அதனுடைய தாகம் தீராதுஇ அதனுடைய அடிப்படை மாறாது எங்களுடைய கட்சி இப்போதும் நிலையான பயணத்தைச் செய்து வருகின்றது. தற்போது நாட்டிலேயே மாற்றம் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகின்றது. தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம் ஒரு மாயையாக இருக்கலாம்.
அல்லது நீண்ட பயணத்தினுடைய ஒரு ஆரம்பமாக கூட இருக்கலாம். ஆனால், அது நல்லதாக இருந்தால் நாங்களும் அவர்களோடு கைகோர்க்கத் தயாராகவுள்ளோம் என்பதை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். சிங்களத் தலைவர்கள் இதயசுத்தியோடு தமிழர்களுக்கான அரசியல் தீர்வைத் தருவார்களா? என நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். 25 வருடங்களாக கிடப்பிலிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, 2004 ஆம் ஆண்டு மீண்டும் வெளியே வந்தது.
அந்தக் கட்சியினுடைய பாரம்பரியம் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மீண்டும் ஒரு புதுப்பொலிவைப் பெற்றுப் பயணம் செய்து வருகின்றது. நாம் குறைந்தபட்சம் 15 பாராளுமன்ற ஆசனங்களை எடுக்க வேண்டும். அவ்வாறு பெற்றால் எங்களுக்கான மாற்றத்தைத் தரும் களமாக அது மாறும். அதிலிருந்து நாம் பின்வாங்கினால், எங்களுடைய மக்கள் சரியான முடிவுகளை எடுக்கத் தவறினால் நாங்கள் தோற்றுப் போன இனமாக மாறிக்கொண்டே போவோம் என்றும் அவர் தெரிவித்தார்.