வீஸா வழங்கலைக் குறையுங்கள்! திருப்பி அனுப்புவதை தீவிரப்படுத்துங்கள்!!

ஒழுங்கின்மை நிலவும் பொலீஸ் பிரிவுகளுக்கு புதிய அமைச்சர் உத்தரவு

படம் :பரிஷியன் செய்திச் சேவை

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பிரான்ஸின் புதிய உள்துறை அமைச்சர் புறுனோ ரெத்தாயோ, வெளிநாட்டுக் குடியேறிகளால் ஒழுங்கின்மை காணப்படுகின்ற மாவட்டங்களின் பொலீஸ் உயர் அதிகாரிகளை நேரில் அழைத்துக் கலந்துரையாடியுள்ளார்.
குடியேறிகளுக்கு வதிவிட அனுமதி வழங்குதல், அவர்களைத் திருப்பி அனுப்புதல் போன்ற நிர்வாகப் பணிகளின் வினைத்திறன் தொடர்பான நிலைமையை மதிப்பீடுசெய்வதற்காகவே அமைச்சர் பொலீஸ் அதிகாரிகளைச் சந்தித்திருக்கிறார்.
நாட்டில் நாடு கடத்தல் செயற்பாடுகளை எண்பது சதவீதம் முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ள பொலீஸ் பிரிவுகள் இவற்றில் அடங்கும் என்றும் – வெளிநாட்டவரை நாடு கடத்தும் நிர்வாகச் செயற்பாடுகளில் ஏதேனும் “ஓட்டைகள்” உள்ளனவா என்பதை அறியப் புதிய உள்துறை அமைச்சர் விரும்புகிறார் என்றும் – விடயமறிந்த வட்டாரங்கள் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன.
உள்துறை அமைச்சுப் பணிமனையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பாரிஸ் பிராந்தியத்தில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அதிகமாக வசிக்கின்ற Seine-et-Marne, Yvelines, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne and Val-d’Oise. ஆகிய பொலீஸ் நிர்வாகப் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள் உட்பட நாட்டில் உள்ள இருபது பொலீஸ் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டு ள்ளனர். அங்கு பேசப்பட்ட விடயங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்த தகவல்களின்படி – ஒவ்வொரு பொலீஸ் பிரிவுகளிலும் ஆண்டு தோறும் வதிவிட அனுமதி வழங்கப்படவேண்டிய வெளிநாட்டவர்களது எண்ணிக்கையை குறைக்கின்ற உத்தரவு அடங்கிய சுற்றறிக்கை ஒன்று பொலீஸ் பிரிவுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. 2012 ஆம் ஆண்டு மனுவல் வால்ஸ் உள்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் வருடாந்தம் 30 ஆயிரம் பேருக்கு வதிவிட உரிமை என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மாற்றுகின்ற விதமாகப் புதிய சுற்றறிக்கை வரவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் பதவியேற்ற உள்துறை அமைச்சர் புறுனோ ரெத்தாயோ, வெளிநாட்டுக் குடியேறிகள் விடயத்தில் இத்தாலியின் தீவிர வலதுசாரிப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியின் வழியைப் பின்பற்றுகிறார். .
பிரான்ஸைப் பொறுத்தவரை குடிவரவு என்பது நாட்டுக்கு ஒரு “வாய்ப்பு அல்ல” என்று அவர் கருதுகிறார். வெளிநாட்டவர் தொடர்பில் அரசுத் தலைவர் மக்ரோனதும் அவரது மையவாதக் கட்சியினதும் கொள்கைகளோடு அவர் முரண்படுகிறார். குடிவரவு தேவையா என்பதைத் தீர்மானிப்பதற்காக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதை அவர் ஆதரிக்கின்றார்.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">