அரசு டாக்டர்கள் போராட்டம்; மேற்கு வங்க அரசுக்கு ஐ.எம்.ஏ., வேண்டுகோள்!
அரசு டாக்டர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது.ஆர்.ஜி., கர் மருத்துவமனையில் இளம்பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மீதான எதிர்ப்பு அலை மேற்கு வங்கத்தில் இன்னும் தீரவில்லை.
மத்திய கோல்கட்டாவின் ஜன்பசாரில், கடந்த 5ம் தேதி மாலை முதல் ஜூனியர் டாக்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், டாக்டர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூனியர் டாக்டர்களின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இளம் டாக்டர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு கிட்டத்தட்ட ஒரு வாரமாகிறது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்திய மருத்துவக் கழகம் ஆதரிக்கிறது. அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைதியான சூழலும், பாதுகாப்பும் ஒரு ஆடம்பரம் அல்ல. அவர்களின் நலனுக்காக நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். நீங்கள் அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். இந்திய மருத்துவ சங்கம் உதவ முடிந்தால், நாங்கள் மகிழ்ச்சியுடன் உதவுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜூனியர் மருத்துவர் ஒருவர் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.