இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் தடவையாக சிஐடி பணிப்பாளர் பதவிக்கு பெண் அதிகாரி நியமனம்.
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் தடவையாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பெண் அதிகாரி ஒருவரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக பணியாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால இந்தப் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார்.
இலங்கைப் பொலிஸ் வரலாற்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண் அதிகாரியும் இவர் ஆவார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால, இலங்கை பொலிஸ் வரலாற்றில் சரித்திரம் படைக்கும் பெண் கதாபாத்திரமாக பார்க்கப்படுகிறார்.
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் மூன்று பயிற்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர்களில் இமேஷா முத்துமாலயும் ஒருவராக உள்ளடங்குகிறார். அவர் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி பயிற்சி உதவி பொலிஸ் அத்தியட்சகராக பணியில் சேர்ந்தார்.அவர் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றார்.இவர், ருஹுணு பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர்.திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார். அவர் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் குற்றப் புலனாய்வுத் துறையின் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.