ஓஷோ ஆசிரமத்தில் 50 முறை பலாத்காரம் செய்யப்பட்டேன்: இங்கிலாந்துப் பெண் பிரேம் சர்க்கம் குற்றச்சாட்டு

இந்தியாவில் பிறந்து, தனது ஆன்மீக சொற்பொழிவுகளால் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்தவர் ஓஷோ.இந்தியாவில் ஆசிரமம் தொடங்கி பின்னர் அமெரிக்காவில் உள்ள ஓரேகானில் குடியேறி அங்கேயே ஒரு ஆசிரமத்தையும் அமைத்தார். பாலியல் சுதந்திரம் குறித்து ஓஷோவின் சொற்பொழிவுகள் மிக புகழ்பெற்றவை. இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த 54 வயதான பிரேம் சர்கம் என்ற பெண் ஓஷோவின் ஆசிரமத்தில் 50 இற்கும் மேற்பட்ட முறை பலாத்காரம் செய்யப்பட்டேன் என்று பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய பிரேம் சர்கம், 6 வயதில் எனது தந்தையுடன் இங்கிலாந்தில் இருந்து புனேவில் உள்ள ஓஷோவின் ஆசிரமத்தில் சேர்ந்தேன். ஆசிரமத்தில் உள்ளவர்கள் உடலுறவு வைத்து கொள்வதை குழந்தைகள் தவறாமல் பார்க்க வேண்டும் என்றும் பெண்கள், பருவமடைந்தவுடன் பாலியல் வழிகாட்டுதலுக்காக வயது வந்த ஆண்களைத் தேட வேண்டும் என்று கற்பிக்கப்பட்டது.

தன்னுடைய 7 வயதில் முதல்முறையாக பாலியல் தொல்லைகளுக்கு ஆளானேன். எனது 7 முதல் 11 வயதுவரை ஆசிரமத்தில் உள்ள வயது வந்த ஆண்களுடன் பாலியல் செயல்களைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். 12 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன். பின்னர் புனேவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்று ஒரேகானில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தாயுடன் சேர்ந்தேன். அங்கு குறைந்தது 50 முறைக்கு மேல் பலாத்காரம் செய்யப்பட்டேன்.

16 வயதில் தான் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து எனக்கு புரிந்தது ஓஷோ ஆசிரமத்தில் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்ட 2 பிரிட்டிஷ் பெண்களின் கதையுடன் என்னுடைய கதையையும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ள சில்ட்ரன் ஆஃப் தி கல்ட் ஆவணப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. எனக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை உலகம் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.