இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய தமிழீழ அரசியல்துறை


இலங்கையின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பைத் தொடர்ந்து புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் தமிழீழ அரசியல் துறையினர் உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நாட்டின் ஒன்பதாவது அரச தலைவராக அனுரகுமார திஸ்ஸநாயக்க பெரும்பான்மை மக்களால் தெரிவுசெய்யப்பட்டதையிட்டு தமது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்ததோடு ஈழத் தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான இறைமையையும்  சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கப்பட்ட, தன்னாட்சி அதிகாரத்தைத் தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் மட்டுமே, இந்த நாட்டில் நிரந்தர அமைதி தோற்றுவிக்கப்படும் வாய்ப்புள்ளதென நாம் உறுதியாக எண்ணுகிறோம் என்ற தமது கோரிக்கையையும்  கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.

தமிழீழ அரசியல்துறையின் அனைத்து நாடுகளுக்கான பொறுப்பாளர் திருமதி. ச. அசோகா அவர்களும் நிர்வாகப் பொறுப்பாளர் திரு. பொ. அற்புதன் அவர்களும் கையொப்பமிட்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்ட கடிதமானது  நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. வெற்றிக்கு, தமிழீழ மக்கள் சார்பில், எமது உளப்பூர்வமான வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களது மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பிக்கப்பட்டுஇ கடந்த 59 ஆண்டுகால வரலாற்றில், பல விபரிக்க முடியாத நெருக்கடிகளைச் சந்தித்த பின்னர், அவற்றையெல்லாம் கடந்து, சனநாயகம் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்தி, பல ஆண்டுகளின் பின்பு, இன்று இந்த அழகிய தீவின் சனாதிபதி என்ற அதியுயர் பதவிக்கு தாங்கள் தெரிவானதையெண்ணி, எமது மக்கள் வியப்படைந்துள்ளார்கள்.

மனிதப் படுகொலைகளின் வலியை உணர்ந்த ஓர் பேரியக்கத்தின் பிரதிநிதி மட்டுமல்ல, பண்பாற்றல் மிக்க ஒரு இடதுசாரித் தலைவர், முதல்முறையாக இந்தப் பிராந்தியத்தில் ஆட்சிப் பீடம் ஏறுவதுஇ நீண்ட காலமாக, சமூக, பொருளாதார, அரசியல் விடுதலை வேண்டி நீதியான போராட்டம் நடாத்தி வரும், எமக்கு புதியதொரு நம்பிக்கையினையும், எதிர்பார்ப்பினையும் தோற்றுவித்துள்ளது. ஈழத் தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கப்பட்ட, தன்னாட்சி அதிகாரத்தைத் தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் மட்டுமே, இந்த நாட்டில் நிரந்தர அமைதி தோற்றுவிக்கப்படும் வாய்ப்புள்ளதென நாம் உறுதியாக எண்ணுகிறோம். இந்தத் தீவில் வாழும் அனைத்து இன மக்களும், சமத்துவமாகவும், கௌரவமாகவும் வழிநடத்தப்பட்டால் மட்டுமே, இலங்கையின் பல்லினச் சூழல் பாதுகாக்கப்படுவதோடு, இந்தத் தீவு எதிர்கொள்ளும், பொருளாதார நெருக்கடிக்கு, நிரந்தரத் தீர்வுகாணமுடியும், என்பதைப் புரிந்துகொண்டு, ஈழத்தமிழர் விடயத்தில்,புதியதொரு அணுகுமுறையைக் கையாள்வீர்கள் என நாம் நம்புகிறோம் என தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.