தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம்:  சென்னை உட்பட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சென்னை உட்பட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத பணம், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தஹ்ரிர் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் ஒரு யூ-டியூப் சேனலில் இருந்ததை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் கண்டறிந்து துப்பு துலக்கினர்.

இதில், சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த முன்னாள் கவுரவ பேராசிரியரான ஹமீது உசேன் என்பவர், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் யூ-டியூப் சேனல் நடத்தி வந்ததும், அதன்மூலம், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி, மூளைச் சலவை செய்து இளைஞர்களை திரட்டி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ஹமீது உசேன், அவரது சகோதரர் அப்துல் ரகுமான் உட்பட 6 பேரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்துஇ இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. சென்னையை சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து, ஹமீது உசேன் உள்ளிட்ட 6 பேரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். சென்னை, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி, செல்போன், சிம்கார்டு, பென் டிரைவ், லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், சிலரையும் கைது செய்தனர்.