நுவரெலியாவில் தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு ஆபத்தா? தேர்தல் முடிவுகள் கூறுவது என்ன?

அநுர, சஜித்துக்கான வாக்கு வங்கி அதிகரிப்பு

 

ஆர்.சனத்
மலையகத் தமிழர்கள் அதிகம்வாழும் மாவட்டங்களில் நுவரெலியா பிரதானமானது. மலையக மக்களின் அரசியல் இருப்பை தீர்மானிக்கின்ற மாவட்டமென்பதால் மலையகத்தின் இதயமாகவும் நுவரெலியா மாவட்டம் பார்க்கப்படுகின்றது.
அம்மாவட்டத்தில் தற்போது ஐந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் களமிறங்கிய பழனி திகாம்பரம், வீ. இராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி.உதயகுமார் ஆகியோர் வெற்றிபெற்று சபைக்கு தெரிவாகினர்.
இதொகாவின் சார்பில் களமிறங்கிய வேட்பாளர்களில் அதன்பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் நாடாளுமன்றம் தெரிவாகினர்.
2020 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 577,717 ஆக இருந்தது. 465,025 பேர் வாக்களித்திருந்தனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணி களமிறங்கிய ஐக்கிய மக்கள் சக்தி 132,008 வாக்குகளைப் பெற்றது. (இதில் 90 சதவீதமான வாக்குகள் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குரியது என கருதப்படுகின்றது.) குறித்த வாக்குகளின் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் சஜித் அணிக்கு 3 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.
இதொகா வேட்பாளர்கள் களமிறங்கிய பொதுஜன பெரமுன கட்சி 239,389 வாக்குகளைப் பெற்றது. 5 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. இதில் இதொகா உறுப்பினர்கள் இருவர். ( மொட்டு கட்சிக்கு விழுந்த வாக்குகளில் ( ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் காங்கிரசுக்குரியது. கொத்மலை, நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதிகளில் பெரும் பகுதி காங்கிரசுக்குரியது.
வலப்பனை, ஹங்குராங்கெத்த ஆகிய தொகுதிகளில் எஸ்.பி., சீ.பி. ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர்.)நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 5,043 வாக்குகளே கிடைக்கப்பெற்றிருந்தன.
கடந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கட்சிகளுக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகள், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பொதுத்தேர்தலில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு ஆபத்து வருமான என்பது பற்றி பார்ப்போம்.
(ஜனாதிபதி தேர்தலில் வென்ற கட்சிக்கு பொதுத்தேர்தலில் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்பது இயல்பு. யார் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்கள். எனினும், கிடைக்கப்பெற்ற வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு இப்பதிவு அமைகின்றது. இது இறுதியான – உறுதியான முடிவும் அல்ல. மக்களின் தீர்ப்பே இறுதியானது – உறுதியானது)
நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 605,292 பேர் தகுதிபெற்றிருந்தனர். 488,578 பேர் வாக்களித்திருந்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்தலில் 42,048 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தாலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 14,643 வாக்குகள் மாத்திரமே நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சஜித் பிரேமதாசவுக்கு 201,814 வாக்குகளும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு 138,619 வாக்குகளும், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 105,057 வாக்குகளும், நாமல் ராஜபக்சவுக்கு 8,821 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. தேசிய மக்கள் சக்திக்குரிய வாக்கு வங்கி சடுதியாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் கடைசியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 78, 222 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 117,232 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
இதொகா களமிறங்கிய மொட்டு கூட்டணி பொதுத்தேர்தலில் மேற்படி தொகுதியில் 122,028 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. இம்முறை இதொகா ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 91,005 வாக்குகளைப் பெற்றார். அந்தவகையில் காங்கிரஸின் வாக்கு வங்கி சற்று சரிந்துள்ளது.
2020 பொதுத்தேர்தலில் கொத்மலை தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி 18,559 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் இம்முறை சஜித் பிரேமதாச 27, 043 வாக்குகளைப் பெற்றுள்ளார்.பொதுத்தேர்தலில் இதொகா தரப்புக்கு இததொகுதியில் 31,822 வாக்குகள் கிடைக்கப்பெற்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலில் 18,250 வாக்குகளே கிடைக்கப்பெற்றன. இவ்விரு தொகுதிகளிலும் அநுரவுக்கான வாக்கு வங்கியும் அதிகரித்துள்ளது.
மொட்டு கட்சி, காங்கிரசுக்குரிய வாக்குகள் அநுரவுக்கும், சஜித்துக்கும் பிரிந்து சென்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 12,949 வாக்குகள் கிடைக்கப்பெற்ற நிலையில், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 23,309 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
2020 பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வெறும் 964 வாக்குகளே கிடைக்கப்பெற்ற நிலையில் இம்முறை 22,894 வாக்குகளுடன் அநுர இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு 9,137 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
வலப்பனை தொகுதியிலும் சஜித்துக்கான வாக்குகள் அதிகரித்துள்ளன. அநுர இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு மூன்றாவது இடமே கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்விரு தொகுதிகளிலும் மொட்டு கூட்டணிக்குரிய பெருவாரியான வாக்குகள் அநுரவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
அந்தவகையில் ஐக்கிய மக்கள் சக்தி, கூட்டணிக்குரிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அவ்வாறே பாதுகாக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றால், இதொகாவின் பிரதிநிதித்துவம் காக்கப்படும். அவ்வாறு அல்லாமல் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலும் அநுர அலை வீசினால் தற்போதைய தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் மாற்றம் வரக்கூடும்.