தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து கொழும்பில் பிரச்சாரக்கூட்டம்

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து தலைநகர் கொழும்பில் இன்று புதன்கிழமை பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. பம்பலப்பிட்டியில் உள்ள வெஸ்ற்றேனில் ஹோட்டலில் இந்த விசேட பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வர் உட்பட பலர் இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த போதிலும் அவர் வருகை தந்திருக்கவில்லை. இக்கூட்டத்தில் கொழும்பு வாழ் தமிழ் மக்களும் சமூக செயல்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிவில் அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் இணைந்து தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரனை களமிறக்கியுள்ளன. இதுவரை ஆட்சி செய்த தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை மறுத்து வந்துள்ளதால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை சர்வதேசத்துக்கு தெற்கில் தெரிவாகும் ஜனாதிபதிக்கு வெளிப்படுத்தும் நோக்கில் தாம் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுவதாக பா.அரியநேந்திரன் கூறியுள்ளார்.