தமிழ்த்தேசிய பொது வேட்பாளர் கோட்பாட்டை ஆதரித்து “சங்கு” சின்னத்துக்கு யாரெல்லாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று அலசுகிறது இந்த கட்டுரை!

 

 

திருநாவுக்கரசு தயந்தன்

எந்த கட்சியையும் தனிப்பட்ட அரசியல்வாதிகளையும் சாராமல் ஒரு தமிழ்தேசிய உணர்வுள்ளவனாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இன ரீதியான அடக்குமுறைகள் கொடுத்த வலிகளை அனுபவித்த உணர்வுகளுடன் இனரீதியான ஒடுக்கு முறைகளுக்கு எதிரான வாக்காக எனது வரிகளையும் ஆதரவையும் பதிவிடுகிறேன்!

இலங்கையில் கிட்டத்தட்ட சர்வாதிகாரத்துக்கு நிகரான நிறைவேற்று அதிகாரங்கள் வழங்கப்பட்டு ஜனாதிபதி முறையை உருவாக்கப்பட்டதே சிறுபான்மை இனங்களில் ஜனநாயக உரிமையை பறிக்கும் திட்டமிட்ட இன ஒடுக்குமுறையின் வடிவமாகவே பார்க்கிறேன். ஏற்கனவே இருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மூலம் சிறுபான்மை இனங்கள் பாராளுமன்றின் பெரும்பான்மையை தீர்மானிக்கும் சக்தியாக மாறுமிடத்தில் அவர்களை அடக்கியாள்வது சாத்தியமற்றது என்பதாலேயே பாராளுமன்றின் அதிகாரங்களை பறித்தெடுத்து அவை எப்போதும் மகாசங்களுக்கு அடிபணிந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவரே வரக்கூடிய ஜனாதிபதிக்கு வழங்கி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.
அந்த ஜனாதிபதியின் செயற்பாடுகளை கட்டுப்பபடுத்தும் எந்த அதிகாரங்களும் சிறுபான்மை இனங்களிடையே இன்று இல்லை. ஏன் பாராளுமன்றுக்கும் இல்லை. கடந்த 8 ஜனாதிபதி தேர்தல்களிலும் தெரிவான ஜனாதிபதிகளிடம் இருந்து சிறுபான்மை இனங்களின் உரிமைகள் தொடர்ச்சியாக சவாலுக்கு உட்படுத்தப்பட்டு அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வந்த வரலாறுகளே உள்ளன. எந்தவித அதிகாரங்களும் இதுவரை புதிதாக கிடைத்ததாக வரலாறு இல்லை. இந்த நிலையில் எண்ணிக்கையில் சிறுபான்மையான தமிழ்த்தேசிய இனம் இலங்கை ஜனாதிபதித்தேர்தலின் நம்பிக்கையின்மையையும் ஒரு தேசிய இனமாக தனக்கான அடையாளத்தை ஒரு தமிழ்தேசிய பொது வேட்பாளர் மூலம் பெரும்பான்மை சமூகத்திற்கும் சர்வதேசத்துக்கும் சொல்லமுனைவது நியாயமானது.

நாங்கள் இவ்வளவு காலமும் எமது உரிமைகளை பறிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட ஜனாதிபதிகளை ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை கூறி ஆதரிக்கும் படி எமது தமிழ் தலைமைகளே ஏமாற்றி வந்துள்ளனர். இந்தமுறையும் அது தான் நடக்கிறது! அனுரவை மாற்றத்திற்காக சிங்கள மக்கள் சிலர் புதிதாக ஆதரிப்பது நியாயமானதே! ஆனால் நாங்கள் இன்னும் அனுரவிடம் அதிகாரத்தை கொடுத்த பார்க்கவில்லை. அவர்களது கடந்தகாலமும் தமித்தேசியத்துக்கு எதிராகவும் நாம் அனுபவித்த அடக்குமுறைகளை ஆதரிக்கும் தரப்பிலும் இருந்திருக்கிறது. யாராக இருந்தாலும் முதலில் நல்லது செய்து காட்டட்டும். நம்புவதா இல்லையா என்பதை அதன்பிறகு தீர்மானிக்கலாம்! ஆக யார் வந்தாலும் வருவதாக இருந்தாலும் தமிழினமாய் சொல்லப்படவேண்டிய செய்தி தெளிவாக உள்ளது! அது உலகத்துக்கு சொல்லப்பட்டே ஆகவேண்டும்! அதாவது நாம் எண்ணிக்கையில் சிறுபான்மை இனங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பேரினவாத ஜனாதிபதிகளை இனியும் நம்பத் தயாரில்லை!

ஆதலால், இந்த முறை “தமிழ் தேசிய ஒருமைப்பாடு” என்ற விடையத்துக்காக மட்டும் அதிலும் குறிப்பாக பேரினவாத ஜனாதிபதிகள் சிறுபான்மை இனங்களுக்கான அதிகாரங்களை உரிமைகளை வழங்க முன்வராத நிலையில் எண்ணிக்கையில் சிறுபான்மை இனமான தமிழ்த்தேசிய இனம் முன்னிறுத்தியிருக்கும் தமிழ்தேசிய பொது வேட்பாரை ஆதரிக்கப் போகிறார்கள்!

தமது இவ்வளவு கால வாழ்வில் “தமிழினத்தில் பிறந்ததற்காக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறோம்” என நினைக்கும் ஒவ்வொரு எண்ணிக்கையில் சிறுபான்மை இனத்தவரும் “சங்கு” சின்னத்துக்கு வாக்கிட இருக்கின்றனர். ஏனெனில் ஒவ்வொருவர் மனசாட்சிக்கும் நன்கு தெரியும் நாம் தமிழர் என்பதாலே பலமுறை நசுக்கப்பட்டிருக்கிறோம் என்று.
அதையும் தாண்டி, “சிங்கள பேரினவாத ஜனாதிபதிகள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை, மலையக தமிழ்மக்களை ஒருபோதும் அடக்கி ஆள நினைக்கவில்லை” என்று நம்புபவர்கள் யாராவது இருந்தால் இன்று தமிழர் அரசியலின் விலைபோன தமிழ்த்தலைமைகள் சொல்வதை கேட்டு ஏதோ ஒரு பேரினவாத ஜனாதிபதி வேட்பாளருக்கு தாராளமாக வாக்களித்துக் கொள்ளட்டும். அவர்கள் மனசாட்சிகளுக்கு அவர்கள் செய்யும் துரோகம் அது!
எந்த ஒரு சிங்களவரும் எந்த ஒரு தமிழ் வேட்பாளருக்காவது எப்போதாவது வாக்களித்திருக்கிறார்களா என்று கேட்டு பாருங்கள்?
நாங்கள் மட்டும் தான் மீண்டும் மீண்டும் ஏமாந்து போகிறோம். எங்களுக்கு வந்து வாய்த்த தலைமைகளும் பதவிகளுக்கும் பெட்டிகளுக்கும் விலைபோய் ஆட்டு மந்தைகளாக எம்மை அழிக்கவந்தவர்களுக்கே வாக்கிட வைக்கின்றனர். கடந்த காலத்தில் இவர்கள் கதைகளை கேட்டு நீங்கள் வாக்களித்த சரத் பொன்சேகாவும் , மைத்திரியும் இன்று யாருடன் உள்ளனர் என்று நீங்களே பாருங்கள்! இதைந்தான் இன்று முன்னிறுத்தப்பட்டுள்ள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களும் நாளை செய்வார்கள்! அவர்களுக்கு வாக்களித்து இனத்தை விற்பதோடு அல்லாமல் ஏமாந்தே போங்கள்!

இந்த முறை தமிழ்த்தேசிய பொது வேட்பாளரின் “சங்கு” சின்னம் பெறப்போகும் வாக்குகள் ஒரு தேசிய இனத்தின் ஒருமைப்பாட்டின் எழிர்ச்சி மட்டுமே! அது “பேரினவாத ஜனாதிபதிகளே நாங்கள் உங்களை நம்பவில்லை” என்ற ஒரே ஒரு செய்தியை தான் சொல்கிறது!
நாங்கள் இன்னுமொரு “தேசம்” என்பதை சொந்த இனத்தின் ஒரு குறியீட்டுத் தலைமையை ஆதரிப்பதன் மூலம் பறைசாற்றுகிறது!

அந்த வாக்குகள் தமிழ்த்தேசிய பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டவரின் சொந்த விருப்பு வாக்குகள் அல்ல! அவர் அதை உரிமை கொண்டாட முடியாது!
பொதுக்கட்டமைப்பில் இருக்கும் எந்தக் கட்சியும், எந்த அரசியல்வாதியும் இது தனக்கான விருப்பு வாக்காக உரிமை கொண்டாட முடியாது!
தமிழ்தேசிய பொது வேட்பாளரை ஆதரிக்கும் தமிழரசுக்கட்சியின் முக்கிய தலைவர்களும் இது தமது விருப்பு வாக்காக உரிமை கொண்டாட முடியாது! அல்லது பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து எதிர்கால அரசியலை திட்டமிடும் எதிர்கால அரசியல்வாதிகளும் இது தமக்கான வாக்காக கொண்டாட முடியாது!
இது தமிழ்தேசிய இன ஒருமைப்பாட்டின் உணர்வுக்கான வாக்கு! அவ்வளவுதான்!

ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன்! தமிழ்த்தேசிய கட்சிகள் என்று அறியப்பட்ட இருபெரும் கட்சிகளும் ஒன்று புறக்கணிப்பை அறிவித்திருக்க மற்றொன்றான தமிழரசின் மத்தியகுழு ஒரு பேரினவாத ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் நிலையில் இது மக்களின் வெறுப்பு வாக்குகளாக அமையலாம்!

ஜனாதிபதி தேர்தலில் நம்பிக்கை அற்ற நிலையில் அதை புறக்கணிப்பது கூட நியாயம் என்று நான் ஏற்றுக்கொள்வேன். அது ஒருவகை அணுகுமுறை. அதேவேளை தமிழ்த்தேசிய பொதுவேட்பாளர் ஒருவருக்கு மொத்த தமிழ்த்தேசமும் பெரும்பான்மையாக வாக்களித்தும் தெளிவான செய்தியை சொல்லமுடியும்!
அந்த நபர் யாரென்பதெல்லாம் தேவையற்றது. ஒரு ஜல்லிக்கட்டு காளையை நிறுத்தியிருந்தாலும் தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டின் குறியீடாக ஆதரிக்கலாம்! இங்கு குறியீடு மூலம் சொல்லப்படும் செய்தி மட்டுமே முக்கியமானது!

தமிழ்த்தேசிய உணர்வை அடியோடு இல்லாமல் செய்வதற்கென்றை தமிழரசில் நுளைந்து இன்று மொத்த கட்சியையும் சிதைத்து தெருவில் விட்டிருப்பவர்களுக்கும் பேரின வாத தலைவர்களை ஆதரிக்கும்படி எந்தவித அடிப்படையும் இன்றி கேட்பவர்களுக்கும் இந்த தேர்தல் மூலம் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அவ்வாறானவர்களின் அரசியல் எதிர்காலம் சூனியமாகலாம்!
அவ்வாறான அரசியல் வாதிகளுக்கான வெறுப்பு வாக்குகளையும் இந்த பொதுவேட்பாளரின் “சங்கு” சின்னம் பெறப்போகிறது!

தமிழ்தேசிய இனமாக நாம் ஒருமைப்படவேண்டும் என்ற செய்தியும் பிரிந்துகிடக்கும் அத்தனை பதவிவெறி பிடித்த தலைமைகளுக்கும் சொல்லப்படும்!

ஆக பல காலங்களின் பின் தமிழ்த்தேசிய கட்சிகளையும் பேரினவாதக் கட்சிகளையும் கடந்து பெரிதும் பிரபலமில்லாத ஒருவர் சிவில் சமூகத்தின் முயற்சியில் உருவான ஒரு சிறு பொதுக்கட்டமைப்பின் முயற்சியில் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட நிலையில் தமிழ்த்தேசிய மக்களின் அடக்கு முறைக்கு எதிரான தமிழ்இன உணர்வு இந்த டோட்பாட்டை தலைமைதாங்கி இந்த முறை தெளிவான செய்தியை பறைசாற்றப்படும் என நம்புகிறேன். உண்மையான போராட்டத்தின் வெற்றி என்பது தலைவர்களால் பெறப்படுவதில்லை! சரியான உணர்வு கோட்பாட்டை வழிநடத்தும் போதே போராட்டங்கள் வெற்றிபெறுகின்றன. வியட்நாமில் தலைவர்களை தெரியாமலே உணர்வுக்காக போரிட்ட மக்கள் அமெரிக்காவை தோற்கடித்தது வரலாறு.

அதே போல இந்த முறை சங்கு சின்னம் பெறப்போகும் வாக்குகள் சற்றும் எதிர்பாராததாக இருக்கும்!
சிங்களத்தின் சுத்துமாத்து தரகர்கள் பொதுவேட்பாளர் படுதோல்வி அடைவார், 10000 வாக்கு கூட பெறமாட்டார் என்று அறிவித்திருக்கும் நிலையில் தமிழ்த்தேசிய உணர்வு வடக்கு கிழக்கு மாகாண மக்களிடையே எந்த அளவு எஞ்சியிருக்கிறது என்பதை பார்க்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்! ஒவ்வொரு தமிழ்தேசிய உணர்வாளர்களினதும் ஓரே புள்ளடி “சங்கு” சின்னமாக இருக்கவேண்டும் என்பது அவா🙏

நன்றி வணக்கம்!