தமிழர்களை சீண்டாமல் இருக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி அறிவுறுத்தல்

மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற சிறுகுறு தொழிலதிபர்கள், ஹோட்டல் அதிபர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோரும் முக்கிய பங்கேற்பாளர்களாக கலந்துகொண்டனர்.

அப்போது ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்னபூர்ணா சீனிவாசன் பேசுகையில்இ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உணவுப்பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரிகள் பற்றி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தார். ‘ஸ்வீட்டுக்கு 5வீதம் காரத்திற்கு கூடுதல் வரி, ப்ரெட், பன்-களுக்கு வரி இல்லை. ஜாம் போன்ற பொருட்களுக்கு 18 சதவீதம் வரையில் ஜி.எஸ்.டி வரி உள்ளது. அதனை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இந்த நிகழ்வு, வீடியோ வாயிலாக சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும், உணவுப்பொருட்களுக்கான வெவ்வேறு ஜி.எஸ்.டி வரி விதிப்பு இருப்பது பேசுபொருளாக மாறியது.இது குறித்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில்இ ‘அவர் ஜனரஞ்சகமாக பேசியதால் அனைவரும் சிரித்தனர். இதுபோன்ற விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படுவதில்லை.’ என தெரிவித்து இருந்தார்.

இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியதை அடுத்து, அன்னபூர்ணா சீனிவாசன் இன்று கோவை நட்சத்திர ஹோட்டலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோரை நேரில் சந்தித்து, மன்னிப்பு கோரினார்.இன்று நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கோரிய வீடியோ அதேபோல சமூக வலைதள பக்கத்தில் வெளியானது.

இந்த தொடர் நிகழ்வுகள் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என  திமுக எம்.பி கனிமொழி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.