புதிய ஜனாதிபதி 10 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்கலாம்:தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்  அறிவிப்பு

அடுத்த வாரம் தெரிவு செய்யப்படவுள்ள புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து 10 மற்றும் 12 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 35 நாட்களுக்கு பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 66 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் புதிய ஜனாதிபதி தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை அதன் ஆயுட்காலம் முடியும்வரை தொடரலாம். எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து தேர்தல் பிரசாரங்களும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறுத்தப்பட வேண்டும். தேர்தலுக்கான நாடு முழுவதும் 13,417 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகள் இதுவரை அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் கணிசமான அளவில் இடம்பெற்றுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியின் ஊடகப் பிரிவும், அமைச்சரவையும் மிகவும் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.