நாம் ஒன்றுப்பட்டே உள்ளோம் என்பதை உலகிற்கு காட்டுவதற்காக எமது பொது வேட்பாளருக்கு வாக்களிப்போம்!”

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் ஜேர்மனியிலிருந்து துரை கணேசலிங்கம் அறைகூவல்;

 

” எமது தாய் மண்ணில் அடக்கப்பட்டு வாழும் ஒரு இனமாகவும் புலம்பெயர் நாடுகளில் ஒரு ஆரோக்கியமான இனமாகவும் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களாகிய நாம் ஒன்றுப்பட்டே உள்ளோம் என்பதையும் எமது வாக்குகளுக்கும் ஒரு பலம் உண்டு என்பதை உலகிற்கு காட்டுவதற்காக எமது பொது வேட்பாளருக்கு வாக்களிப்போம் எனவே எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தங்கள் வாக்கை தமிழ்ப்பொது வேட்பாளர் கிழக்கு மண் தந்த தமிழ்த்தேசியவாதி பா.அரியநேந்திரன் அவர்களுக்கு அளித்து நமது அடையாளத்தை நிரூபிப்போம்!”

இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் துரை கணேசலிங்கம் அவர்கள் அறைகூவல்விடுத்துள்ளார். கனடாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவராக தற்போது நடா ராஜ்குமார் அவர்கள் பணியாற்றிவருகின்றார் என்பதும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கீழ் இயங்கும் அனைத்து கிளைகளையும் சீரமைப்புச் செய்து உத்வேகத்தோடு இயக்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக முடுக்கிவிடப்பட்ட நிலையில், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ தொடர்பான கருத்தியலின்அவசியம் கருதி தனது செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் துரை கணேசலிங்கம் அவர்கள் விடுத்துள்ள இந்தஅறிக்கையில் தொடர்ந்து அவர் தெரிவித்துள்ளதாவது:- எமது இனம் இலங்கைத் தீவில் கடந்த70 வருடங்களுக்கு மேலாக தென்னிலங்கை பௌத்த பெரும்பான்மை சக்திகளாலும் முதலாளித்துவ சக்திகளாலும் நசுக்கப்பட்டு வருகின்ற ஒரு இனமாக உள்ளது. இதனால் வெகுண்டெழுந்த எமது தலைவர்களும் தொண்டர்களும் முதலில் அகிம்சைப் போராட்டத்தை நடத்தினார்கள். அமைதிப் போராட்டத்தை நடத்துகின்றார்களே என்று எமது மக்களை அடக்குமுறையாளர் விட்டுவிடவில்லை. அடித்தும் அவமதித்தும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

தொடர்ந்து எமது தலைவர்களை ஒரு பக்கத்தில் செயற்படுமாறு விட்டு விட்டு இளைஞர்கள் ஆயுதமேந்தி நின்று ‘தமிழீழம்’ என்ற கோட்பாட்டுடன் போராடத் தொடங்கினார்கள். அந்த போராட்டத்தை முறியடிக்க உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்ப்புச் சக்திகள் உருவாகின. அவற்றையெல்லாம் முறியடித்து புலம் பெயர்ந்த தமிழர்களின் பேராதரவுடன் விடுதலைப் போராட்டம் ‘கூர்மை’ அடைந்தது. வெற்றியின் வாசலுக்கு அருகில் சென்று கொண்டிருந்த எமது விடுதலைப் போராட்டத் தலைவர்களையும் அவர்கள் பின்னால் அணிவகுத்து நின்ற போராளிகளையும் மக்களையும் உலக நாடுகள் பலவற்றையும் இந்துசமுத்திர அரசியல் பொருளியல் நலன்களின் அடிப்படையில் இலங்கை அரசுடன் இணைந்திருந்து அழித்தன.

இப்போது 2009ம் ஆண்டுக்கு பின்னர் பலமிழந்தவர்களாக இருந்த எமக்கு தமிழ் மக்களை ஒன்றுதிரட்டி தமிழ்தேசியத்தின் பலத்தை நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது. எனவே நாம் அதைப் பயன்படுத்துவோம். எமது பொது வேட்பாளரின் வெற்றிக்காக உழைக்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் பங்களித்து வருகின்றனர்.

எனவே எமது தாயக மக்களின் நலன்களுக்காகவும் இனத்தின் ஒற்றுமையை காட்டுவதற்காகவும் எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தங்கள் முதலாவது வாக்கை தமிழ்ப்பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களின் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எமது அடையாளத்தை நிரூபிப்போம்!” இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் துரை கணேசலிங்;கம் அவர்கள் ஜேர்மனியிலிருந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.