தமிழ் அரசு கட்சி மத்திய செயற்குழுவின் 14ம் திகதி கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது: சஜித்திற்கான ஆதரவில் மாற்றம் ஏற்பாடது என கணிப்பு

தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆய்வு செய்யும் விசேட குழு இன்று  வவுனியாவில் கூடியது.கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கத்தின்  வவுனியா இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று ஆரம்பமானது. சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், சி. ஸ்ரீதரன் மற்றும் வடமகாண சபை அவை தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்வரும் 14ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய
செயற்குழு கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில், 3 பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் ஆராயப்பட்டதாகவும், எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் கூடி, இறுதி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டதாகவும்  இதன் பின்னர், மத்தியகுழு கூட்டத்தை கூட்டுவது பற்றி பரிசீலிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்தியகுழு கூட்டத்தை நடத்த 2 வாரங்களின் முன்னர் அழைப்பு அனுப்பப்பட வேண்டுமென்பதால், சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென எடுத்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அமையாது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.