“ரிக்ரொக்” ஊடாக இளம் வாக்காளரைக் கவரும் பார்டெல்லா!

பாரிஸ் புறநகரில் வளர்ந்த 28 வயது இளைஞனுக்கு அதிகரிக்கும் செல்வாக்கு!

இந்தப் பிரசுரம் தமிழ் இளையோராலும் பாரிஸ் புறநகரங்களில் வசிக்கின்ற இளைய தலைமுறையினராலும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. பலருக்கும் ஆச்சரியம்தான். பிரான்ஸ் அதன் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பத்தில் நின்றுகொண்டிருக்கிறது என்பதே இதன் பின்னால் உள்ள செய்தி.
“ஜோர்டான் பார்டெல்லாவே அடுத்த பிரதமர்!”-இந்த நிமிடப் பொழுதில் இளையோர் மத்தியில் ஒலிக்கும் ஒரே கோஷம் இதுதான் .
“… நான் பிறப்பதற்கு முந்தி நடந்தவைகளைப் பற்றி எனக்குத் தெரியாது.அதுபற்றிக் கவலை இல்லை நிகழ்காலமே முக்கியம். இப்போது உள்ளவர்கள் மத்தியில் உண்மையான ஒரே வேட்பாளர் அவர்தான்… -யுவதி ஒருவர் இவ்வாறு கருத்துச் சொல்கிறார். அவளுக்கு 19-20 வயது இருக்கலாம். தீவிர வலதுசாரிகளது வரலாறைக் கவனத்தில் எடுக்க விரும்பாத ஒரு தலைமுறை ஒரு மாற்றத்துக்காகப் பார்டெல்லாவின் பின்னால் அணி திரள்கின்றது.
பாரம்பரிய தேர்தல் பரப்புரை உத்திகள் மாறிவிட்டன. தீவிரப் போக்குடைய இளம் வேட்பாளர்களது தேர்தல் பிரசாரத்துக்கான முக்கிய தளமாக மாறியிருக்கிறது ரிக்ரொக்.
ஜோர்டான் பார்டெல்லாவின் ரிக்ரொக் கணக்கில் 1.6மில்லியன் பயனாளர்கள் அவர்களில் 74 வீதமானவர்கள் 24 வயதுக்கு உட்பட்டவர்கள். ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தலைமையிலான அணிக்குக்கிடைத்த வாக்குகளில் 24 வீதமானவை 24 வயதுக்குக் குறைந்த வாக்காளர்களினால் செலுத்தப்பட்டவை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பார்டெல்லாவின் ரிக்ரொக் பதிவுகள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன திட்டமிட்ட முறையில் வீடியோக்களை வெளியிட்டு இளையவர்களிடையே கவனத்தைப் பெறுகிறார். அவர்களை வாக்களிக்க ஈர்க்கிறார். இதே உத்தியையே ஏனைய வேட்பாளர்களும் நாடவேண்டியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்வதற்கு வரையறைகள் கிடையாது. வாக்களிக்கும் அந்தக் கணத்தில் கூட ஒரு வாக்காளரிடம் தாக்கம் செலுத்தும் வல்லமை அதற்குண்டு. குறிப்பாக இளம் வாக்குகளை அள்ளவேண்டுமானால் அவர்களை ஈர்க்கும் களத்துக்குச் சென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம்.
மேடைப் பேச்சுக்களையும் வண்ணச் சுவரொட்டிகளையும் கேட்டும் பார்த்தும் வாக்களித்த காலம் காலாவதியாக, சமூக வலைத்தளங்களில் செல்வாக்குச் செலுத்தினால் தான் வாக்குப் பொறுக்குவதிலும் செல்வாக்குச் செலுத்தலாம் என்ற நிலைமை இன்று.
பிரான்ஸின் பாரம்பரியக் கட்சிகளின் மூத்த அரசியல்வாதிகள் பலரும் சமூக ஊடகப் பிரசார உத்திகளை நாடத் தொடங்கிவிட்டனர்.
தீவிர தேசியவாதி என அறிமுகப்படுத்தப்படுகின்ற இளைஞன் ஜோர்டான் பார்டெல்லா தலைமையிலான அணி ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றி ஐரோப்பா எங்கும் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கவில்லை.
ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இரு கட்ட வாக்களிப்பில் தனக்கு அறுதிப் பெரும்பான்மையை வழங்குமாறு பிரெஞ்சு மக்களிடம் அவர் கேட்டிருக்கிறார். வற் வரியைக் குறைத்து வாழ்க்கைச் செலவை இலகுவாக்கவும் வெளிநாட்டுக் குடியேறிகளுக்குக் கதவடைக்கவும் தனக்கு அறுதிப் பெரும்பான்மைப் பலம் மிக அவசியம் என்றும் அவர் பகிரங்கமாகக் கேட்டிருக்கிறார்.
அறுதிப் பெரும்பான்மை கிட்டினால் மட்டுமே தான் பிரதமராகப் பதவியேற்பார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் மிக அதிகமாக வசிக்கின்ற பாரிஸின் புறநகரப் பகுதியாகிய ட்ரான்சியில் (Drancy) 13, செப்ரெம்பர் 1995 இல் பிறந்தவர் ஜோர்டான் பார்டெல்லா. அதே இடத்தில் ஒர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது தாயாருடன் தனியே வளர்ந்தவர்.
பாரிஸ் புறநகரங்களை உள்ளடக்கிய அவரது சொந்த மாவட்டம் Seine-Saint-Denis. வெளிநாட்டவர்கள நிறைந்த பகுதி. வதிவிட நெருக்கடியும் வன்செயல்களும் வறுமையும் மலிந்த பிரதேசம். ஒருவேளை அதே புறநகர வாழ்வுதான் அந்தச் சிறுவனிடம் வெளிநாட்டவரை எதிர்க்கின்ற தேசியவாதச் சிந்தனை தோன்ற மூலவேராக இருந்திருக்கக்கூடும்.
மரின் லூ பென்னின் தீவிர தேசியவாதக் கொள்கைகளால் அந்த இளைஞன் எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பது தெரியாது. ஆனால் லூ பென் அம்மையாரது கவனத்தில் சிக்கியது முதல்க்கொண்டு பிரெஞ்சு மக்கள் அனைவரதும் கவனத்தை ஈர்த்த ஒரு முக்கிய நபராக மாறிவந்திருக்கிறார்.
பிரான்ஸில் குடிவரவையும் குடியேறிகளையும் எதிர்க்கின்றவர்களது ஆணி வேர்களைத் தேடி ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் அத்தனை பேரது பூர்வீகங்களும் எங்கோ ஒரு வெளிநாட்டில் போய்த்தான் முடிவடையும். ஜோர்டான் பார்டெல்லா அல்ஜீரியா-இத்தாலி – பிரான்ஸ் கலப்புப் பூர்வீகத்தைக் கொண்ட குடும்பப் பரம்பரைகளில் இருந்து பிறந்து வந்த பிரெஞ்சுக் குடிமகன்.
இப்போது வெளிநாட்டவர்களையும் குடியேறிகளையும் எதிர்ப்பதையே பிரதான கொள்கையாகக் கொண்ட ஒரு கட்சியின் தலைவர் அவர் .
ஜோர்டான் பார்டெல்லாவின் கட்சி நாடாளுமன்றத்தின் 577 ஆசனங்களில் 250 முதல் 280 வரையானவற்றைக் கைப்பற்றிப் பரந்த வெற்றியைத் தனதாக்கும் என்று தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. அறுதிப் பெரும்பான்மைக்கு 289 ஆசனங்கள் அவசியமாகும்.
28 வயதான இந்த இளைஞனின் தலைமையில் தீவிர வலது சாரிகள் இதனைச் சாதிப்பார்களா? ஐரோப்பாவில் அடிப்படை அரசியல் மாற்றங்களுக்கு அது வித்திடுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">