சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தலாய் லாமாவை சந்தித்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சீனாவின் எச்சரிக்கையையும் மீறி இந்தியா சென்றுள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவின் எச்சரிக்கையையும் மீறிதரம்சாலாவில் உள்ள தலாய் லாமாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சீனாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் தங்கி இருக்கிறார். 1959ல் திபெத்தில் இருந்து தப்பி வந்த அவருக்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது.தலாய் லாமாவை சந்திக்க செல்வாக்கு மிக்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் நேற்று தரம்சாலா சென்றனர் .டெக்சாஸின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான மைக்கேல் மெக்கால் தலைமையிலான இக்குகுழுவில் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியும் உள்ளார்.
தரம்சாலாவில் உள்ள தலாய் லாமாவின் மடாலயத்திற்கு சென்றஅவர்களை பள்ளி குழந்தைகள் புத்த துறவிகள் மற்றும் பெண் துறவிகள் வரவேற்றனர்.இதையடுத்து அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர் தலாய் லாமாவை இன்று சந்தித்தனர். திபெத் பிரச்சினைக்குத் தீர்வு காண சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அமெரிக்கா இயற்றியுள்ள மசோதா அதிபர் ஜோ பைடனின் கையொப்பத்திற்காகக் காத்திருக்கும் நிலையில் அது தொடர்பாக தலாய் லாமாவுடன் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
தலாய் லாமாவை ஆபத்தான பிரிவினைவாதி என்று அழைக்கும் சீனா அமெரிக்க எம்பிக்களின் இந்த பயணம் குறித்தும் மசோதா குறித்தும் ஆழ்ந்த கவலையை ஏற்கனவே வெளிப்படுத்தி இருந்தது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலாய் லாமாவை சந்திக்க வேண்டாம் என்றும் இந்த மசோதாவில் அதிபர் பைடன் கையெழுத்திடக் கூடாது என்றும் அது வலியுறுத்தியது.