கனடா அண்ணனால் ஏமாற்றப்பட்ட யாழ்ப்பாணத்து தம்பி :ஆங்கிலத்தில் காணி உறுதி எழுதி ஏமாற்றி விட்டதாக முறைப்பாடு!!
கனடாவிலிருந்து கொழும்புக்கு குடும்பமாக வந்த அண்ணன் தன்னையும் தனது மனைவியையும் ஏமாற்றி விட்டதாக கொழும்பில் ஒருவர் முறைப்பாடு கொடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறைப் பகுதியில் உள்ள 40 பரப்பு காணி எனது பெற்றோருக்கு இருக்கிறது. அதன் உறுதி பெற்றோர் இறந்த பின்னர் என்னிடமே இருந்தது.
இந் நிலையில் கடந்த மாத இறுதியில் கனடாவிலிருந்து வந்த அண்ணன் என்னிடமிருந்த பெற்றோரின் சொத்தான அந்த உறுதியை இரு பகுதிகளாக பிரிப்போம் என கூறினார். நானும் அதற்கு உடன்பட்டேன். அண்மையில் விடுவிக்கப்பட்ட அந்த காணியை அண்ணனே முழுமையாக துப்பரவு செய்து இரு பகுதிகளாக பிரித்தும் எல்லைகள் இட்டார். காணியை தானே காசு கொடுத்து அளந்து அந்த ஆவணத்தையும் எடுத்து அதன் பின் பெற்றோரின் சொத்தை எமக்கு மாற்றுவதற்காக பெற்றோரின் மரணச்சான்றிதழ்கள் மற்றும் பல ஆவணங்களை அண்ணன் கொழும்பில் தங்கியிருந்து கேட்ட போது யாழ்ப்பாணத்திலிருந்து அவற்றை கொடுத்திருந்தேன். அதன் காணியை இரு பகுதிகளாக பிரிந்து எழுதி வைத்துள்ளதாகவும் மனைவியுடன் கொழும்புக்கு வருமாறு கேட்டார்.
நானும் உடன்பட்டு அங்கு சென்றேன். சிங்கள சட்டத்தரணி ஒருவரே குறித்த காணியை எழுதியிருந்தார். எனக்கு சிங்களம் மிகக் குறைந்த அளவே தெரியும். ஆனால் உறுதி ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அண்ணன் தவறு செய்ய மாட்டார் என நினைத்து காணியின் வரை படத்தில் எனது பங்கு குறிக்கப்பட்டிருந்ததை பார்த்து திருப்தி அடைந்து சட்டத்தரணி நீட்டிய இடத்திலெல்லாம் நானும் மனைவியும் கையொப்பம் இட்டோம். காணி எழுதி முடிந்த பின்ன அடுத்த நாள் எனது வங்கிக் கணக்குக்கு 30 லட்சம் பணத்தை வைப்பிலிட்டதாக அண்ணன் கூறினான். நான் மிகுந்து ஆச்சரியப்பட்டு ஏன் அண்ணா இவ்வளவு பணம் வங்கியில் எனக்காக போட்டீர்கள் என கேட்ட போது அது காணி நீ எனக்கு எழுதி தந்ததுக்கான பணம் என கூறிய போது நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனின் எனது 20 பரப்பு காணியின் தற்போதய பெறுமதி 2 கோடி ரூபாவுக்கு மேல் வரும்.
அதன் பின்னரே நான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இதன் பின் யாழில் உள்ள சட்டத்தரணி ஒருவரை அணுகினேன். அவர் அண்ணனுடன் தொடர்பு கொண்ட போது கொழும்பில் வைத்து எழுதிய காணி உறுதியின் பிரதி சட்டத்தரணிக்கு அனுப்பினார் அண்ணன். அதில் எனது பங்கான 20 பரப்பு காணியையும் அண்ணனுக்கு நன்கொடையாக வழங்குவதாக இருந்தது. அதற்கு பின் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என சட்டத்தரணி கூறி பொலிசாரிடம் முறையிடும்படி கூறினார்.
இது தொடர்பாக அண்ணனிடம் கதைத்த போது அண்ணன் என்னை தரக்குறைவாக கடுமையாக ஏசியதுடன் கொலை அச்சுறுத்தலும் விடுத்தார். அதன் பின்ன கடந்த வாரம் அண்ணன் மீண்டும் தனது குடும்பத்துடன் கனடா சென்றுவிட்டார். தற்போது அந்தக் காணிக்குள் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதுடன் காணியும் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை. தன்னை ஏமாற்றிய அண்ணனு்ககு நடவடிக்கை எடுங்கள்’ என தம்பி பொலிசாருக்கு முறையிட்டுள்ளார்.