ஜனாதிபதி ரணிலின் பதிவிக்காலம் நீடிக்கப்படக்கூடிய சாத்திப்பாடு இருப்பதாக தகவல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக்காலத்தை ஒரு வருடத்திற்கு நீடிக்க இலங்கையின் அரசியலமைப்பு அனுமதிக்கலாம் என்ற அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2015 ஏப்ரல் மாதம் 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டிருந்த தருணத்தில் அரசியலமைப்பில் கவனிக்கப்படாதிருந்த தவறு காரணமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக்காலத்தை ஒரு வருடத்திற்கு நீடிக்க இலங்கையின் அரசியலமைப்பு அனுமதிக்கலாம் . 19வது திருத்தம் ஜனநாயக சீர்திருத்தங்களை நிறுவவும், நல்லாட்சியை உறுதிப்படுத்தவும், ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளாக குறைக்கவும் முயன்றது. இருப்பினும், பதவிக்காலம் தொடர்பான நிலைத்தன்மையை உறுதி செய்வதை அதில் உறுதியான சரத்துகள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.
19வது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இருவரின் ஆறு வருட பதவிக்காலம் பற்றிய அனைத்து குறிப்புகளும் ஐந்தாண்டுகளாக மாற்றப்பட்டாலும், உறுப்புரை 83 b கவனிக்கப்படாமலும் மாற்றப்படாமலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான ஓட்டையை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான எந்தவொரு சட்டமூலத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தேவை, அதைத் தொடர்ந்து சர்வஜன வாக்கெடுப்பில் ஒப்புதல் பெற வேண்டும். எவ்வாறாயினும், பிரிவு 83 b இன் கீழ், அத்தகைய வாக்கெடுப்பு, சட்டமூலமானது ஐந்து ஆண்டுகளுக்கு அல்லாமல், ஆறு ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டால் மட்டுமே தேவைப்படும்.
இதன் பொருள், ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பை மீறாமல் தனது மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை 11 மாதங்கள் மற்றும் 29 நாட்களுக்கு நீட்டிக்க முடியும். அதன் பின்னர் தேர்தலுக்குச் செல்ல முடியும். ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு நாடு தயாராக இல்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்துக்களுடன் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.