திருகோணமலையில், இந்து வழிபாட்டு அடையாளங்கள் காணப்படுகின்ற மலைத் தொடரை உடைப்பதற்கு முயற்சி
திருகோணமலையில், இந்து வழிபாட்டு அடையாளங்கள் காணப்படுகின்ற மலைத் தொடரை உடைப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் உடைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டாலும், உடைப்பு இயந்திரம் அப்பகுதியில் இருந்து இன்னும் அகற்றப்படவில்லை. இவ்விடயம் சம்மந்தமாக சேனையூர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் அபிவிருத்திக்காக எமது வாழ்வாதரத்தினை அழித் தொழிக்கும் நடவடிக்கையினை உடன் நிறுத்த வேண்டும். வாழ்வாதாரத்தினை பாதிக்கும் வகையில் மலைகளை உடைப்பதற்கு அனுமதி வழங்கியது யார்’ என குறித்த சம்பவம் தொடர்பில் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
நாளாந்தம் கூலித் தொழிலையும், நெற்செய்கை, கால் நடை வளர்ப்பு போன்ற வாழ்வாதார முயற்சிகளை நம்பி வாழ்ந்து வரும் மக்கள்தான் இப் பகுதியில் இருக்கின்றனர். குளம், வயல், காடு போன்ற வளங்களையே நம்பி வாழ்கின்றனர் மலையைச் சூழவுள்ள வயல்கள், மேச்சல் தரை இயற்கைக் காட்டு வளம் என்பன கல்லுடைப்பால் அழிவுறும் அபாயம் ஏற்படும்’ என சேனையூர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்