அதிகாரப் பகிர்வு பற்றி தெரிவாக கூறுங்கள்: யாழ் சந்திப்பில்   சஜித் பிரேமதாஸவிடம் சுமந்திரன் வைத்த கோரிக்கை

அதிகாரப் பகிர்வு சம்பந்தமான உங்களுடைய நிலைப்பாட்டைத் தெட்டத் தெளிவாகத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் விபரமாக எடுத்துச் சொல்லுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று கோரிக்கை விடுத்தாா்.

யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையை சுமந்திரன் முன்வைத்தாா். தமிழரசுக் கட்சியின் மாா்ட்டின் வீதியிலுள்ள அதன் தலைமை அலுவலகத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தா்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தாா்கள்.

இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக எங்களுக்கு இருக்கின்ற ஏமாற்றங்கள், நாங்கள் போதாது என்று சொல்லுகின்ற 13 ஆவது திருத்தத்தைக் கூட இப்போது இன்னமும் மோசமான நிலைக்குக் கடந்த கால அரசுகள் கொண்டு வந்து விட்டிருக்கின்றன. கொடுத்ததையும் மீளப் பெறுகின்ற ஒரு சூழ்ச்சியின் காரணமாக இப்போது அது மிகவும் நலிவடைந்ததாகக் காணப்படுகின்றது.

ஆகவே, 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவேன் என்று சொல்லுவதில் கூட இன்றைக்கு அர்த்தம் இல்லாமல் இருக்கின்றது’ என்று சஜித்திடம் விளக்கிக்கூறினாா். வடக்கு மாகாண அவைத் தலைவராக இருக்கின்ற சி.வி.கே. சிவஞானம் மாகாண சபை அனுபவங்களையும், மாகாண சபை நிறுவனங்களையும் எடுத்துச் செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலைமைகளையும் விபரமாக எடுத்துக் கூறினார். இவற்றுக்கெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக்கும்போது தன்னுடைய நோக்கு அதாவது முதலில் கிராமம் கட்டியெழுப்பபட வேண்டும் என்றும், அதன் பிறகு நகரம், பிரதேச செயலகம், மாவட்டம், மாகாணம் கட்டியெழுப்பபட்டு அதற்குப் பிறகுதான் நாடு கட்டியெழுப்பப்படும் என்றும் தன்னுடைய கோட்பாட்டைப் பற்றி தெரிவித்தார்