பிரித்தானிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது
14 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சிக்கு பின்னர் பிரித்தானியாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை நான்காம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அட்டவணைக்கு ஏற்ப நள்ளிரவு கடந்த ஒரு நிமிடத்தில் 650 நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடங்கள் வெற்றிடமாகியுள்ளது. பெரும் அதிருப்திகளை சந்தித்துள்ள ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, எதிர்வரும் பொது தேர்தலில் பாரிய பின்னடைவை சந்திக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
கடந்த காலங்களில் இடம்பெற்ற இடைக்கால தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் கட்சியினர் பெரும் தோல்விகளை சந்தித்திருந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வெற்றிகளை குவித்திருந்தது.இந்த நிலையில் எதிர்வரும் பொது தேர்தலிலும் தாக்கம் செலுத்தும் என கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதனிடையே ஆளும் கட்சியை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளனர்.
தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு, பிரதமர் ரிஷி சுனக் நாடு முழுவதும் பயணம் செய்து, கன்சர்வேடிவ் கட்சியை ‘பாதுகாப்பான’ விருப்பமாக விளம்பரப்படுத்தினார்.அவரது பிரச்சாரம் சில சிக்கல்களைச் சந்தித்தது, அவரது தலைமைத்துவத்திற்கும் மூழ்கும் கப்பலின் கேப்டனுக்கும் இடையிலான ஒப்பீடுகளை குறிப்பிட்டுள்ளனர். கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, தொழிற்கட்சிக்கு சராசரியாக 45 வெற்றிவாய்ப்பும், கன்சர்வேடிவ் கட்சிக்கு 23 வீத வெற்றிவாய்ப்பும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.