பொது வேட்பாளர் குறித்து எந்தவிதமான கருத்து பரிமாற்றமும் தேவையில்லை : சி.வி.விக்னேஸ்வரன்  சுமந்திரனுக்கு பதிலடி

ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் தொடர்பான கருத்து பரிமாற்ற கூட்டத்திற்கு எனக்கொரு அழைப்பும் வரவில்லை. ஆனால் இவ்வாறான கருத்துப் பரிமாற்ற கூட்டங்கள் என்பது எங்களைத் திசை திருப்புவதாகவே அமையும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருத்தார்.மேலும் தேசியத்தோடு இணைந்திருக்கும் எங்கள் சிவில் சமூகத்தினர் தமிழ் மக்கள் சார்பிலே ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்ற முடிவிற்கு வந்து விட்டார்கள். இதனை முன்வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுடன் பல அரசியல் தரப்பினர்களுடனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.இவ்வாறாக பொதுவான நிலைப்பாடு எடுக்கப்பட்டு அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கும் போது இந்த விவகாரத்தை பொது வெளியில் கொண்டு சென்று கருத்து பரிமாற்றம் என்று சொல்லி முரண்பாட்டிற்குரியதாக கொண்டு வந்து நிறுத்துவது எங்களை திசை திருப்புவதாகவே அமையும். நாங்கள் எடுத்துக் கொண்ட தீர்மானத்தில் இருந்து நழுவக் கூடாது.

அந்தத் தீர்மானத்தில் இருந்து எங்களை அங்கு இங்கு என கொண்டு செல்ல அல்லது வழிநடத்த பார்க்கின்றார்கள். ஆகவே எங்களுடைய சிவில் சமூகத்தினர் இது சம்மந்தமான நடவடிக்கைகளில் மிகக் கவனமாக இறங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். எமது தீர்மானம் குறித்து எந்தவிதமான கருத்து பரிமாற்றமும் தேவையில்லை. ஏனெனில் நாங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டோம். அது சம்பந்தமாக ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தங்களுடைய கருத்துக்களை எங்களுக்கு தருகிற போது அதற்குப் பதிலை கொடுப்பது எங்களுடைய கடமை.அதனை விடுத்து இந்த விடயத்தை பொது வெளியில் அல்லது பொது மன்றத்தில் பேசவும் அதை பெரிதாக்கவும் வேறுவிதமாக இதை திசை மாற்றிக் கொண்டு செல்ல நினைப்பதும் பிழையான ஒரு வழிமுறை என்பது என்னுடைய கருத்தாகும். எனத் தெரிவித்தார்.

சுமந்திரன் தமிழ் தேசியத்தோடு நின்றவர் அல்ல. இதுவரையில் நமக்குத் தெரிந்த வரையில் தமிழ் தேசியத்தோடு ஒன்றியவரும் அல்ல. எனக்கு பயமில்லை நான் அதை சொல்லுவேன் இதை சொல்லுவேன் என்று அவர் சொல்லுவதிலிருந்தே அது தெரியும். பொது வேட்பாளர் என்ற விடயத்தில் அவரிற்கு ஈடுபாடு இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.