நாட்டில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்.

நாட்டில் பெய்து வரும் அதிக மழையால்  களனி மற்றும் களுகங்கை போன்ற ஆறுகளில் மேல் பகுதிகளின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியவுடன் இந்த ஆறுகளின் நீர்மட்டம் முதல் முறையாக எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்திற்கு அண்மித்த களனி மற்றும் களுகங்கையின் மேல் பகுதிகளில் வசிப்பவர்கள் திடீர் வெள்ளம் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் மழை தொடரும் பட்சத்தில் இந்தப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த பிரதேசங்களில் நீர் மட்டம் உயர் மட்டத்தில் நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.