ஈரானுக்கு இந்தியர்கள் கடத்தல்: சட்டவிரோத சிறுநீரக விற்பனையில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்தவர் கைது
ஈரானுக்கு இந்தியர்களை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் சபித் நாசரை கைது செய்துள்ளதாகவும், பணத்திற்கு உடல் உறுப்பு தானம் செய்யச் சொல்லி அவர் பலரையும் ஏமாற்றியுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் திருச்சூரில் உள்ள வாலாபாட்டைச் சேர்ந்தவர் சபித் நாசர் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ பெற்றவர், 2017 முதல் 2019 வரை திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வேலைகளைச் செய்துள்ளார். இதன்பின்னர், 2019 முதல் ஈரானின் தெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையில் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு மாத சம்பளமாக ரூ 40,000 வழங்கப்பட்டுள்ளது.
சபித் நாசர் கடந்த ஜூலை 2019 இல், ரூ 5 லட்சத்திற்கு ஈடாக தனது சொந்த சிறுநீரகத்தை தானம் செய்ய இலங்கை சென்றுள்ளார். அவருக்கு ஃபேஸ்புக் நட்பு வட்டாரத்தில் இருந்த ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் இந்த பயணத்திற்கு உதவியுள்ளார். இதனையடுத்து, அந்த ஆண்டு அக்டோபரில், அவர் ஈரான் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சபித் நாசர் ஈரானில் இருந்து கேரளா வந்துள்ளார். அப்போது அவரை கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். ஈரானுக்கு இந்தியர்களை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் சபித் நாசரை கைது செய்துள்ளதாகவும், பணத்திற்கு உடல் உறுப்பு தானம் செய்யச் சொல்லி அவர் பலரையும் ஏமாற்றியுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.