ஆண்களுக்கான “ப்ராஸ்டேட்” (விந்துப்பை) நோய்!
55-60 வயது ஆனாலே, பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்படும் பிரச்னை சிறுநீர் கழித்தலில் சிரமம். சொட்டுச்சொட்டாக சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்க அதிகம் சிரமப்படுதல் என்று தங்களுக்கு இருக்கும் பிரச்னையை வெளியே சொல்லத் தயங்கியே, பிரச்னையைப் பெரிதாக்க விட்டு விடுகின்றனர். முடி நரைத்தல், கண்ணில் புரை போல, ஆண்களுக்கு வயது அதிகரிக்கும் போது ப்ராஸ்டேட் சுரப்பியின் அளவு பெரிதாவதும் இயற்கை தான். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், எளிதில் சரிப்படுத்தலாம்.
ஆண்களில் இனப்பெருக்க உறுப்பில் ப்ராஸ்டேட் சுரப்பி முக்கியமானது. இந்த சுரப்பி, சிறுநீரகப் பைக்கு கீழ் வால்நட் வடிவத்தில் அமைந்திருக்கிறது. விதைப் பையில் இருந்து விந்து அணுக்கள், பிரத்யேகக் குழாய் வழியாக இந்த சுரப்பிக்கு வரும். ப்ராஸ்டேட் சுரப்பியிலிருந்து வெளிவரும் வெள்ளை நிறத் திரவம் விந்து அணுக்களுடன் இணைந்து விந்து திரவம் (Semen) உற்பத்தியாகிறது. இந்த வெள்ளை நிறத் திரவ உற்பத்திக்கு ப்ராஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜன் (Prostatespecific antigen) என்ற புரதம் காரணமாக இருக்கிறது.
வயது அதிகரிக்கும் போது, ப்ராஸ்டேட் சுரப்பியின் அளவு இயல்பாகவே சிறிதளவு அதிகரிக்கும். ஆனால், 25 கிராம் எடை அளவுக்குள் இருப்பது நல்லது. ப்ராஸ்டேட் சுரப்பி வெளிப்புறத்தில் பெரிதானால், பயப்படத் தேவை இல்லை. ஆனால், சுரப்பியின் உட்புறமாகத் தடித்து பெரிதானால், அதன் தசைகள் சிறுநீர் செல்லும் குழாயை நெருக்கும். இதனால், சிறுநீர் வெளியேறுவதில் கடினமான சூழல் ஏற்படும்.
ப்ராஸ்டேட் பெரிதாக இரண்டு காரணங்கள் உள்ளன. புற்றுநோய் காரணமாக பெரிதாவது ஒரு வகை. பினைன் ப்ராஸ்டடிக் ஹைப்பர்ப்ளேசியா (Benign Prostatic hyperplasia) எனும் பிரச்னை மற்றொரு வகை.
பினைன் ப்ராஸ்டடிக் ஹைப்பர்ப்ளேசியா
60 வயதைக் கடந்தவர்களில் மூன்றில் ஒருவருக்கு பினைன் ப்ராஸ்டடிக் ஹைப்பர்ப்ளேசியா பிரச்னை இருக்கிறது. ஆண்களுக்கு வயதானவுடன் ப்ராஸ்டேட் ஏன் பெரிதாகிறது என்பதற்கு முழுமையான மருத்துவ விளக்கம் கிடையாது. எனினும், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் – ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் விகிதம் மாறும் போது, ப்ராஸ்டேட் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ப்ராஸ்டேட் பெரிதாகும் போது அதில் இருக்கும் ஃபைபர் தசைகள் அதிகமாக இயங்க ஆரம்பிப்பதால் வலி ஏற்படும். சிறுநீர் முழுமையாக வெளியேறாது. ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டால், ஒரு கட்டத்தில் சிறுநீரை வெளியேற்ற முடியாமல் போகலாம். அதன் பிறகு செயற்கையாக டியூப் பொருத்தி சிறுநீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும். உடலில் சிறுநீர் அதிகமாகத் தங்கும் பட்சத்தில் சிறுநீரகத்தின் செயல்திறனும் குறைந்து சிறுநீரகக் கோளாறுகளும் வரக்கூடும்.
இந்தப் பிரச்னை சர்க்கரை நோய் உள்ள ஆண்களுக்கு அதிகம் காணப்படும். இந்த சுரப்பி பெரிதாவதை ஆரம்பக் நிலையில் கண்டறிந்தால், மருந்து மூலமாக, கட்டுப்படுத்த முடியும். முற்றிய நிலையில், அறுவைசிகிச்சைதான் தீர்வு. ப்ராஸ்டேட் பெரிதாவதை மருத்துவர்கள் நேரடியாக தொட்டுப் பார்த்தே ஓரளவு கண்டுபிடிக்க முடியும். எனினும், ரத்தத்தில் பி.எஸ்.ஏ அளவு சீராக இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலம் துல்லியமாகக் கண்டறியலாம்.
ப்ராஸ்டேட் புற்றுநோய்
பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவது போல், ஆண்களுக்கு பிரத்யேகமாக வரக்கூடியது ப்ராஸ்டேட் புற்றுநோய். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவுதான். 60 வயதை தாண்டியவர்களுக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் வரலாம் வயது அதிகரிக்கும் போது புற்று நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.
பி.எஸ்.ஏ பரிசோதனை செய்த பிறகு, புற்றுநோயாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும் பட்சத்தில், ப்ராஸ்டேட்டை நுண்ணிய அளவில் எடுத்து பயாப்சி செய்யப்படும். ப்ராஸ்டேட் புற்றுநோய் ஆரம்பக் கட்டத்திலேயே பரிசோதனை மூலம் கண்டறியப் பட்டால், ரோபோட்டிக் சர்ஜரி மற்றும் ரேடியோ தெரப்பி மூலம் குணப்படுத்தி விடமுடியும். முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கு, ஹார்மோன் சென்சிட்டிவ் டைப் மற்றும் ஹார்மோன் ரெசிஸ்டன்ஸ் டைப் என்ற இரண்டு வகையான சிகிச்சைகள் உண்டு. ஹார்மோன் சென்சிட்டிவ் டைப்பில் விரைகளை நீக்கி, டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வாழ்நாளை 15-20 வருடங்கள் நீட்டிக்க முடியும். ஹார்மோன் ரெசிஸ்டன்ஸ் டைப் வகையில், சிகிச்சைகள் அளித்தாலும் பெரிய அளவில் பயன் தராது.
ப்ராஸ்டேட் வீக்கம் ஏற்பட்டாலே புற்றுநோய் என பீதி அடைய வேண்டியது இல்லை. தற்போது இந்தியாவில் ப்ராஸ்டேட் புற்றுநோய் குறைவு என்றாலும் மாறிவரும் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை காரணமாக வருங்காலத்தில் அதிகரிக்கக் கூடும். எனவே ப்ராஸ்டேட் பற்றிய விழிப்பு உணர்வு ஆண்களுக்கு மிகவும் அவசியம்
சிறுநீருக்கான சுய பரிசோதனை
வயதானவர்கள் மாதம் ஒருமுறை சிறுநீர் சரியாக வெளியேறுகிறதா என்பதைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் நன்றாக தண்ணீர் குடித்து விட்டு அரை மணி நேரம் கழித்து 300 மிலி கொள்ளளவு கொண்ட குடுவையில் சிறுநீர் கழிக்க வேண்டும். 30 விநாடிகளில் சிறுநீர் முழுவதுமாக வெளியேறினால், பிரச்னை இல்லை. அடுத்த மாதம் மீண்டும் பரிசோதனை செய்தால் போதும். சிறுநீர் முழுவதுமாக கழிக்க ஒரு நிமிடத்துக்கு மேல் ஆகிறது எனில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த சோதனையை, தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மூன்று – நான்கு முறை செய்து சிறுநீர் தாமதமாக வெளியேறுவதை உறுதிப்படுத்தினால், உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
50 வயதைக் கடந்த ஆண்கள், ஆண்டுக்கு ஒருமுறை பி.எஸ்.ஏ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை அடிக்கடி சாப்பிடவும். குறிப்பாக லைக்கோபீன் (Lycophene) நிறைந்த தக்காளி, தர்பூசணி, மாதுளம்பழம் சாப்பிடுவது ப்ராஸ்டேட் பிரச்னைகளைத் தடுக்கும்.