“ஒலிம்பிக் பாஸ்”பெற பதிவு செய்யும் தளம் அரசு அறிவிப்பு, தேவையான ஆவணங்கள் எவை?
விவரங்கள் வெளியாகின
Kumarathasan Karthigesu-பாரிஸ்
ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்ற காலப்பகுதியில் பாரிஸில் சில பாதுகாப்பு வலயங்களுக்குள்ளும் போட்டிகள் நடைபெறுகின்ற இடங்களுக்குள்ளேயும் நடமாடுவதற்கு விசேட டிஜிட்டல் பாஸ் (Pass Jeux) பொலீஸ் தலைமையகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கியூஆர் கோட்டுடன் கூடிய அந்தப் பாஸைப் பெறுவதற்கு விவரங்களைப் பதிவு செய்வதற்கான அரசாங்க இணையத் தளம் https://www.pass-jeux.gouv.fr/ கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இன்று 13 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் அதில் தங்களது பதிவுகளைச் செய்துகொள்ள முடியும். 13 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பாஸ் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
நகரின் மையப்பகுதிகளில் சிவப்பு(zone rouge) மற்றும் பழுப்பு நிறங்களில் (Le périmètre gris) காட்டப்படுகின்ற பாதுகாப்பு வலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளுக்குள் வசிப்பவர்கள் மற்றும் அங்கு தங்கவுள்ளோர், தொழில் மற்றும் பிற தேவைகளுக்காக அங்கு சென்றுவரவேண்டியோர் இந்தப் பாஸ் வைத்திருக்கவேண்டியது கட்டாயமாகும்.
பாரிஸ் நகரிலும் புற நகரங்களிலும் பாதுகாப்பு வலயங்களாகவும் போட்டி நடைபெறுகின்ற பகுதிகளாகவும் அமையவுள்ள இடங்களின் வரைபடங்களும் அவசியமானவர்கள் எவ்வாறு கியூஆர் கோட்டுடன் கூடிய பாஸைப் பெற்றுக் கொள்வது என்பன போன்ற பல விளக்கங்களும் அதில் வழங்கப்பட்டுள்ளன.
ஒருவர் தனது பின்வரும் சுயவிவர ஆவணங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு அந்த இணையத் தளத்தில் பாஸ் கோரி விண்ணப்பிக்கலாம்.
- பெயர், முதற் பெயர் (Nom et Prénom)
- பிறந்த திகதியும் இடமும் (Date et lieu de naissance)
- ஈ-மெயில் முகவரி (Adresse email)
- வதிவிட தபால் முகவரி (Une adresse postal)
- ஆளடையாள ஆவணத்தின் பிரதி (La copie d’un justificatif d’identité)
- ஆளடையாளப் புகைப்படம்(Une photo d’identité)
பாஸ் பெறும் நடைமுறைகளில் ஒரு பகுதியாக வாகனத்துக்கான அனுமதியையும் பெற வேண்டுமாயின் –
- வாகனப் பதிவுச் சான்றிதழ் (Carte grise du véhicule)
இவற்றை விட மேலதிகமாகச் சில ஆவணங்கள் கோரப்படலாம். அவை :
- வதிவிட முகவரியை அத்தாட்சிப்படுத்தக் கூடிய ஆவணங்கள்(Justificatif de domicile)
- தற்காலிக வதிவிடத்தை அத்தாட்சிப் படுத்தும் ஆவணங்கள்(Justificatif d’hébergement temporaire)
- தொழில் வழங்குநரால் அல்லது சேவை நிறுவனத்தினால் வழங்கப்படும் அத்தாட்சி ஆவணம் (Justificatif employeur ou de mission)
- தொழில் அடையாள அட்டை (Carte professionnelle)
- பயணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்தும் ஆவணம்(Justificatif de visite)
- குறிப்பிட்ட இடத்தில் வாகனத் தரிப்பிடம் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணம்(Justificatif de parking dans la zone)
விண்ணப்பதாரிகள் இவை போன்ற ஆவணங்களைத் தயாராக வைத்துக் கொண்டு பதிவைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.