எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கே தமிழ் மக்கள் ஆதரவு
இலங்கைக்கான புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளின்படி மேற்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 17 செப்டம்பர் மற்றும் 16 ஒக்டோபர் திகதிகளுக்கிடையில் ஏற்கப்படுமென என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. இதனிடையே தமிழ் மக்கள் விரும்புகின்ற தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திகழ்கின்றார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுகின்ற நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன் வேண்டும்? அந்த விடயத்தில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் ஏன் அதிக கவனம் செலுத்துகின்றார்கள்.? ஏன கேள்வி எழுப்பியுள்ளார் , ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன. மேலும், நடக்கக்கூடிய விடயங்கள் தொடர்பில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும்.
அதைவிடுத்து மக்கள் விரும்பாத – சாத்தியம் இல்லாத விடயங்கள் தொடர்பில் பேசி காலத்தை வீணடிக்கக்கூடாது. அந்தவகையில், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயமும் தேவையற்ற ஒன்று. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் என்ன தீர்மானம் எடுத்தாலும்,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கே தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவைப்பெற ரணில் தரப்பு தமிழ் கட்சிகள் பலவற்றினை வளைத்துப்போட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கே தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என்ற பிரச்சாரம் முடக்கிவிடப்பட்டுள்ளது.