தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தாம் தயார்: வெளிநாட்டு பிரதிநதிகளிடம் அனுரகுமார தெரிவிப்பு.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆன்ட்ரே பிராஞ்ச் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது.மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் நடப்பு மனித உரிமைகளின் நிலைமை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயன்முறை பற்றி இரு தரப்புக்கும் இடையில் விரிவாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இலங்கையில் நல்லிணக்க செயன்முறையை உன்னிப்பாக அவதானிப்பதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எதிர்வரும் தேர்தல் செயன்முறைக்குள் அரசியல் கட்சிகளால் பின்பற்றபட வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தினர். சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் பெட்ரிக் மெகார்த்தி, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான பகுப்பாய்வாளர் நெத்மினி மெதவல மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் சில வெளிநாட்டு தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர், தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர் ஆகியோரை சந்தித்து, அநுரகுமார திஸாநாயக்க கலந்துரையாடியுள்ளார். இதன்போது இலங்கையில் இனங்களுக்கு இடையிலான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் தீர்வுக்கான அணுகுமுறைகள் குறித்து தூதுக்குழு பிரதிநிதிகள் வினவியுள்ளனர். சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையில் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பிரச்சினைக்கு தனித்து ஒரு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் அது ஏனைய காரணிகளுடன் பிணைந்து காணப்படுவதால் தீர்வினை எட்டும்போது ஒட்டுமொத்த விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தூதுக்குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.