அபிவிருத்தி உத்தோயோகஸ்தரை கேள்வி கேட்ட பெண்: ஈ.பி.டி.பி யின் பிரதிநிதி என தெரிவித்து தொலைபேசி மிரட்டல்
பொருளாதார அபிவிருத்தி உத்தோயோகஸ்தரை நோக்கி கேள்வி எழுப்பிய சனசமூக நிலையத்தை சேர்ந்த பெண்ணொருவரை, தன்னை ஈ.பி.டி.பி யின் பிரதிநிதி என தெரிவித்த நபர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.
குறித்த மிரட்டல் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணினால் , மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சனசமூக நிலையம் ஒன்றினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் நவாலி வடக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர், குறித்த சனசமூக நிலையத்தின் பிரதிநிதியான பெண்ணொருவரை சந்தித்து, ஒதுக்கப்பட்ட நிதி வேறு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், உங்களுக்கான திட்டம் வரும் போது, அதற்கு உரிய ஒப்பந்தம் உங்கள் சனசமூக நிலையத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனை அடுத்து அவ்விடத்தில் இருந்து, அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வெளியேறி சென்றதை அடுத்து, குறித்த பெண்ணை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தன்னை ஈ.பி.டி.பி.யின் பிரதிநிதி என கூறி, பொருளாதார உத்தியோகஸ்தருடன் என்ன பிரச்சனை என கேட்டு, அப்பெண்ணை மிரட்டியுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடமும் முறையிட்டுள்ளார்.