விமானங்களின் ஜிபிஎஸ் சிக்னலை குழப்பி அச்சுறுத்தல்?மின்னணுப் போர் ஆரம்பம்!

ரஷ்யா மீது குற்றச்சாட்டு பால்டிக் நாடுகள் உஷார்!

Kumarathasan Karthigesu-பாரிஸ்
பால்டிக் வான்பரப்பில் பயணிகள் விமானங்கள் ஜிபிஎஸ் சிக்னலை இழக்கும் சம்பவங்கள் சமீப நாட்களில் நடந்துள்ளன.சிக்னல்களைக் குழப்பும் (GPS jamming) சதிக்குப் பின்னால் ரஷ்யாவே செயற்படுவதாக பால்டிக் நாடுகளது வெளிவிவகார அமைச்சர்கள் கடந்த வாரம் குற்றம் சுமத்தி உள்ளனர். பயணிகள் விமானங்களது பாதுகாப்புடன் தொடர்புடைய இந்த விடயத்தை சுவீடனும், பின்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் நேட்டோ அமைப்பினதும் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளன.
கடந்த மார்ச்சில் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் கிரான்ட் ஷாப்ஸ் (Grant Shapps) பயணித்துக் கொண்டிருந்த ஒரு விமானம் பால்டிக் கடற் பகுதியில் சுமார் அரை மணி நேரம் ஜிபிஎஸ் தொழில்நுட்பக் கோளாறுக்கு

இலக்கானது. போலந்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த அமைச்சரும் அவரது குழுவினரும் தங்களது மொபைல் தொலைபேசிகளைப் பயன்படுத்த முடியாமற்போயிருந்தது.

மார்ச் 18 ஆம் திகதி அமெரிக்காவின் MQ9 Reaper ராணுவ ட்ரோன் ஒன்று சடுதியாக வீழ்ந்து நொறுங்கியிருந்தது. ரஷ்யாவின் கலினின்கிராட் (Kaliningrad) தளத்தில் இருந்து 250 கிலோ மீற்றர்கள் தொலைவில் போலந்துக் கிராமம் ஒன்றின் மீது பறந்துகொண்டிருந்த சமயத்திலேயே சிக்னல் குழப்பங்கள் காரணமாக அந்த விபத்து நேர்ந்தது என்று கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் தொடர்பில் அமெரிக்கா எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. ரஷ்யாவின் அரச கட்டுப்பாட்டில் இயங்கும் செய்தி நிறுவனம், அந்த ட்ரோன் ரஷ்யாவின் மின்னணு ஊடறுப்பு சாதனம் (jamming system) மூலமே சுடப்பட்டது என்று தெரிவித்திருந்தது.

கடந்தவாரம் பின்லாந்து விமானங்கள் ஜிபிஎஸ் சிக்னலில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக எஸ்தோனியாவின் விமான நிலையம் ஒன்றில் பாதுகாப்பாகத் தரையிறங்க முடியாத நிலைமை ஏற்பட்டது. அதனையடுத்து பின்லாந்து தேசிய விமான சேவை நிறுவனமாகிய “ஃபின்னேயார்”(Finnair) எஸ்தோனியாவின் விமான நிலையங்களுக்கான பறப்புகளை இந்த மாதம் முதல் நிறுத்தியுள்ளது.
எஸ்தோனியாவில் ரஷ்யாவின் எல்லைக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கின்ற Artu நகர விமான நிலையத்துக்குச் சேவையை நடத்துகின்ற ஒரேயொரு சர்வதேச விமான சேவை நிறுவனம் ஃபின்னேயார் ஆகும். இந்த நகரத்துக்கு தலா எண்பது பயணிகளுடன் சென்ற இரண்டு விமானங்களே தரையிறங்குவதற்கு முன்னராகப் பல தடவைகள் ஜிபிஎஸ் குழப்பங்களுக்கு இலக்காகின.

விமானத்தின் நவிகேஷன் கருவிகள் பதற்றத்தை வெளிப்படுத்தின என்று கூறப்படுகிறது.ரஷ்யா பால்டிக் கடலில் அமைந்துள்ள கலினின்கிராட் தளத்தில் மின்னணுப் போர்ச்சாதன (electronic warfare) நிலையம் ஒன்றை ரகசியமாக இயக்கி வருகிறது என்ற தகவல்களை அந்தப் பிராந்தியப் பாதுகாப்பு வல்லுநர்கள் அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">