மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா: பிரதமர் மோடி சவால்.

மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேளையில் தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மற்ற கட்சி தலைவர்கள் மீதான விமர்சனங்களை முன்வைக்கவும்இ அவர்களின் விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கவும் அரசியல் தலைவர்கள் தவறுவதில்லை.தற்போது காங்கிரஸ் – பாஜக இடையே இடஒதுக்கீடு விவகாரம் என்பது தீவிரமடைந்து வருகிறது.

முன்னதாக காங்கிரஸ் தங்கள் தேர்தல் அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாக நடத்துவோம். அதன் மூலம் பொருளாதர ரீதியில் பின்தங்கிய சமூகத்திற்கு ஏற்றபடி இடஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று உறுதி அளித்து இருந்தனர். இதனை கடுமையாக விமர்சித்து வரும் பாஜக தலைவர்கள், காங்கிரஸ் சட்டத்திற்கு புறம்பாக இடஒதுக்கீட்டை பறிக்க பார்க்கிறது என்று தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்து நேற்று குஜராத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மீண்டும் காங்கிரஸ் மீதான தனது விமர்சனங்களை முன்வைத்தார். இடஒதுக்கீட்டை பாஜக தலைமையிலான அரசு பாதுகாத்து அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் என்று குறிப்பிட்டார்.

அதேபோல, மதத்தின் பெயரால் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்த மாட்டோம். இடஒதுக்கீட்டை மாற்றியமைத்து அரசியலமைப்போடு விளையாட மாட்டோம் என நாங்கள் கூறுகிறோம். அதே போல, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் எழுத்துபூர்வமாக இதனை உறுதியளிக்க முடியுமா என நான் சவால் விடுகிறேன் என பிரதமர் மோடி பேசினார்.