பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரையில் பாஜகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாறி மாறி விமர்சனம் செய்து கொள்கின்றனர்.
இதனால் இரு கட்சி தலைவர்கள் மீதும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத ரீதியாக பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஆனந்த் எஸ் ஜோன்டேல் என்பவர் கடந்த 15ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.
அதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி இந்து தெய்வங்கள், வழிபாட்டு தலங்கள் பெயர்கள் மூலம் மதத்தை தொடர்புபடுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் தேர்தல் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அப்போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால், இந்த வழக்கின் மீதான விசாரணையானது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய வழக்கு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இந்த மனு விசாரணைக்கு தகுதியற்றது, இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. இதனால் இந்த மனு முற்றிலும் தவறானது என கூறி பிரதமர் மோடிக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி.