ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நாளை முக்கியமான நாள்: பதற்றத்தில் சந்திரிக்கா மற்றும் மைத்திரி.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஒரு புறம் சந்திரிக்கா கூட்டணி மற்றொரு புறம் மைத்திரி கூட்டணி என இரு துண்டுகளாக பிளவுபட்டு இருக்கின்றது. இவ்வாறு இரு பக்கங்களிலும் நின்றுக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் வழக்குத் தாக்கல் செய்து கொள்வது மட்டுமல்லாமல் அவரவருக்கு எதிராக குரல் எழுப்பவும் ஆரம்பித்து விட்டநிலையில் நாளை வியாழக்கிழமை இரு அணியினருக்கும் தீர்மானமிக்க ஒரு நாளாக அமைய இருக்கின்றது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு மைத்திரிபால சிறிசேன தகுதியற்றவர் என கூறி பதவி நீக்கலுக்கான நிரந்தர தடையுத்தரவை கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் கடந்த 4ஆம் திகதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுத்த வேண்டுகோளை பரிசீலித்த நீதிமன்றம் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் குறித்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் போது மக்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதென நீதிமன்றம் தீர்ப்பளித்ததையும் மேற்கோள்காட்டி, அவர் தவிசாளர் பதவியை வகிப்பதற்கான தகுதியை இழந்துள்ளார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும், மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை மீறி நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை சட்டவிரோதமாக பதவியிலிருந்து விலக்கி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையற்ற பிரிவினருக்கு பிரதமர் பதவியை வழங்க தீர்மானித்ததன் மூலம் யாப்பை மீறியுள்ளார் எனவும் குற்றம் சுமத்தப்பட்ருந்தது. இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழக்கமான தலைவர் மைத்திரிபால சிறிசேன எனவும் வழக்கமான நிர்வாக சபை உறுப்பினர்கள் யார் என்பதை எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் உண்மைகளை வெளிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தயார் எனவும் அக்கட்சியின் துணைத் தலைவர் ஒருவர் ஞாயிறு திவயின சிங்களப் பத்திரிகைக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
நிமல் சிறிபால டி சில்வாவை நியமித்தது சட்டவிரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது நாளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தீர்மானமிக்க ஒரு நாளாக அமையும். நீதிமன்றம் மூலம் நாளை வழங்கப்படும் தீர்ப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால பயணத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.