ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளில் இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்கள் : ரஸ்யாவிடம் விளக்கம் கோரிய இலங்கை.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளில் இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்கள் சிலரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதுவரான பேராசிரியர் ஜனிதா லியனகே, ரஷ்ய இராணுவத்திடம் அவர்கள் பற்றிய விபரங்கள் ஏதேனும் இருக்கிறதா எனக் கேட்டுள்ளார்.
இது தொடர்பான ஊடக அறிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேணல் நளின் ஹேரத்திடம் இது குறித்து கருத்து கேட்டபோது, சில முன்னாள் இராணுவ வீரர்கள் ரஷ்ய இராணுவத்தில் சட்டத்துக்கு புறம்பாக இணைந்திருக்கலாம். இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதில் உள்ள பாதிப்புக்கள் குறித்து படையினருக்கு விளக்கமளிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் ஏதாவது சலுகைகளின் மூலமாக அவர்கள் ஈர்க்கப்பட்டிருக்கலாம். அவர்களில் யாராவது யுத்தத்தின்போது இறந்துபோனால் யார் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுமட்டுமின்றி, இதற்கு முன்னரும் இலங்கை உட்பட வெளிநாட்டு பிரஜைகள் அடிக்கடி சுற்றுலா விசாவில் ரஷ்யா சென்று அங்கு ரஷ்ய இராணுவத்தில் இணைவதாக இலங்கை தூதுவரான பேராசிரியர் ஜனிதா லியனகே சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய பல இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும் அவர்கள் குறித்த போதிய தகவல்கள் இல்லாத காரணத்தினால் தூதரகத்தினால் இந்த அறிக்கைகளை உறுதிப்படுத்தவோ அல்லது இராணுவ சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களின் நிலையை அறியவோ முடியவில்லை.இவ்வாறிருக்கும்போது தற்போது முன்னாள் இலங்கை இராணுவ வீரர்கள் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்துள்ளார்கள் என்ற தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.