அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் ரோபோ.
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பல்வேறு வகைகளில் நூதன பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் டீ போடுவது, புரோட்டா மற்றும் தோசை சுட்டு தருவது, ஆட்டோ ஓட்டுவது, விவசாய நிலங்களில் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரிப்பது என்று விதவிதமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
சில வேட்பாளர்கள் மார்க்கெட்டுகளில் பூ மற்றும் காய்கறி, பழங்கள், இறைச்சி விற்பனை செய்தும் பிரசாரம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் தற்போது ரோபோக்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி டவுன் பஸ் நிலையத்தில் ஒரு ரோபோ அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அம்மு என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த ரோபோவை கோவையைச் சேர்ந்த சிவபிரித்தம் என்பவர் ஏஐ டெக்னாலாஜியுடன் வடிவமைத்துள்ளார்.இந்த ரோபோவுக்கு அருகில் யாராவது சென்றால் அந்த ரோபோவின் கையில் உள்ள ‘லேப்டாப்பில்’ எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவப்படங்களுடன் அ.தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை காட்சிப்படுத்துவதுடன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்குகிறது.
மேலும், மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாஇ தே.மு.தி.க. நிறுவனரும்இ மறைந்த நடிகருமான விஜயகாந்த் ஆகியோர் பழைய பிரசார ஆடியோக்களையும் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பது போலவும், குறிப்பிட்ட தூரம் மட்டும் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அசோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அந்த ரோபோ பிரசாரமும் செய்கிறது.
இதனை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவிகள் அந்த ரோபோவிடம் சென்று ‘செல்பி’ எடுத்து செல்கின்றனர். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளும் ஆர்வத்துடன் அதன் அருகில் சென்று துண்டு பிரசுரங்களை எடுத்து செல்கின்றனர்.