ஜனாதிபதித் தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைக்க வேண்டும்: பெப்ரல் அமைப்பு கோரிக்கை.
இடம்பெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டி ஆரச்சி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்குள் தற்போது தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளதுடன் பல தேர்தல்கள் தொடர்பாகவும் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தி வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் ஒக்ரோபர் மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.
அது தொடர்பான பூரண அதிகாரம் மற்றும் பொறுப்பு தாங்கள் உட்பட தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருக்கிறது. அதனால் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு தேர்தல் திகதியை மாற்றியமைக்க யாருக்கும் இயலாது. அதனால் வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் மற்றும் பிரசார காலம் தொடர்பாக நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்து உரிய காலத்தில் நீங்கள் ஆணைக்குழுவால் தேர்தல் திகதியை அறிவிக்கும் என்பதே எமது நம்பிக்கை. எதிர்வரும் தேர்தலில் முன்னணி வேட்பாளர்கள் பலர் போட்டியிடும் வாய்ப்பு இருக்கிறது.
அதனால் கடும் போட்டித்தன்மை காணப்படுவதால், வேட்பாளர்களின் செலவை வரையறுக்கும் சட்டத்தை முதல் தடவையாக செயற்படுத்த இருக்கிறது. அதேபோன்று இம்முமுறை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களை மேம்படுத்துவதற்காக பிரதான ஊடகங்கள் உட்பட சமூக வலைத்தளங்களைப் பயன்டுத்த இடமிருக்கிறது. அதன் பிரகாரம் எதிர்வரும் தேர்தல் மிகவும் விறு விறுப்பானதாக அமையும். அதனால், இம்முறை தேர்தலுக்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு தாங்கள் உட்பட ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பில் கலந்துகொள்வது தேர்தலின் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கான சாதகமாகும்.மேலும் தேர்தல் அறிவிப்பு செய்யும் திகதி தொடர்பில் அரசியலமைப்பின் பிரகாரம் எமக்கு சில தீர்மானங்களுக்கு வரமுடியும் என்றாலும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இதற்காக தயாராவதற்கு போதுமான காலம் வழங்கும் வகையில் அவர்களுக்கு அழைப்பு விடுப்பது தொடர்பில் உங்களதும் ஆணைக்குழுவினதும் விரைவான கவனத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.