இன்று பெரிய வெள்ளி.

இன்று பெரிய வெள்ளி நாளாகும். இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்த நிகழ்வின் போது கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இதற்கமைய, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், விசேட ஆராதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு ஆகிய நாட்களில் ஆராதனைகள் நடைபெறும் தேவாலயங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள 2, 978 கிறிஸ்தவ தேவாலயங்களில் 2,230 தேவாலயங்களில் ஈஸ்டர் ஆராதனைகள் நடைபெறவுள்ளதுடன், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினரால் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

அதற்காக 6,837 பொலிஸ் அதிகாரிகளும், 464 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும், 2,882 இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாரேனும் நடமாடினால் அவர்கள் குறித்து அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 119, 118 மற்றும் 1927 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.