தலைதுண்டிக்கும் வீடியோவுடன் பாரிஸ் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
கல்வி நிறுவனங்களினது பாதுகாப்பில் அரசு கவனம்
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாரிஸ் பிராந்தியப் பாடசாலைகளின் இணைய வலைப் பின்னலுக்குள் சைபர் தாக்குதல் மூலம் ஊடுருவிய சக்திகள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்போவதாக்கூறும் மிரட்டல் செய்திகளை விடுத்திருக்கின்றனர்.
கடந்த சில தினங்களாக “இஸ்லாமிய “தேசம்”(“Islamic State”) அமைப்பின் பெயரில் விடுக்கப்பட்டிருக்கின்ற அந்த மிரட்டல் செய்திகளோடு தலை துண்டிக்கப்படும் அதிர்ச்சிக் காட்சி அடங்கிய வீடியோ ஒன்றும் பகிரப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது .
பாரிஸ் பிராந்தியத்தின்(Ile-de-France region) ஐம்பது பாடசாலைகள் இவ்வாறு சைபர் தாக்குதலினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் நேரடியாக அணுகக் கூடிய – கல்விச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய – இணையத் தளம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனால் கொலை மிரட்டல் செய்திகளும் வீடியோவும் மாணவர்களது தகவல் பெட்டிகளுக்கு ஊடாக அவர்களது பார்வைக்குக் கிடைத்துள்ளன.
“எல்லா வகுப்பறைகளிலும்” சி 4″ வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. உங்கள் உடல்கள் ஆயிரம் துண்டங்களாகச் சிதறப்போகின்றன” என்று மாணவர்களது தகவல் பெட்டிகளுக்கு வந்த செய்தி ஒன்றில் கூறப்பட்டுள்ளது. மிரட்டல் செய்திகளால் அதிர்ச்சியடைந்த பலரும்
அதுபற்றி முறையிட்டு வருகின்றனர்.
ஊடுருவல் தெரியவந்ததை அடுத்து பிரதமர் கப்ரியேல் அட்டால் கல்வி அமைச்சருடன் இணைந்து அவசர மாநாடு ஒன்றைக் கூட்டி அதுபற்றி ஆலோசனை நடத்தியுள்ளார்.
அச்சுறுத்தல் மிக்கவை என அடையாளங்காணப்பட்ட நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது பற்றி அதிகாரிகளோடு பிரதமர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஊடுருவல் மூலம் மிரட்டல் செய்திகள் விடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் விசேட பாதுகாப்பு நடைமுறைகள் இன்று திங்கட்கிழமை காலை முதல் பின்பற்றப்படவுள்ளன.